பிரதோஷம், மகா சிவராத்திரி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி


பிரதோஷம், மகா சிவராத்திரி: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி
x
தினத்தந்தி 26 Feb 2022 3:30 AM IST (Updated: 26 Feb 2022 3:30 AM IST)
t-max-icont-min-icon

பிரதோஷம், மகா சிவராத்திரியையொட்டி சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. 

இந்தநிலையில் மாசி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 28-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த நாட்களில் பக்தர்கள் காலை 7 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய, விடிய இரவு முழுவதும் 4 கால சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கூறுகையில், பிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரியையொட்டி சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றார்.

Next Story