உக்ரைன் போர்: கடும் குளிரில் சுரங்கப்பாதையில் உயிர் பயத்துடன் தங்கியுள்ள தமிழக மாணவர்கள்
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக இரவு முழுவதும் கடும் குளிரில் மெட்ரோ சுரங்கப்பாதையில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளோம் என உக்ரைனில் உள்ள காரைக்குடி மருத்துவ மாணவர் பெனடிக் தெரிவித்தார்.
சென்னை,
ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கிடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. இதையொட்டி உக்ரைன் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி ரெயில்வே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி மகன் பெனடிக் என்பவர் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.
அங்கு நடைபெறும் சூழ்நிலை குறித்து மாணவர் பெனடிக் தனது தயாரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கூறியதாவது-
ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக இங்கு இரவு பகலாக பலத்த குண்டு வெடிப்பு சத்தம் கேட்டு வருகிறது. என்னை போன்ற மாணவர்களை இரவு முழுவதும் இங்குள்ள மெட்ரோ சுரங்கப்பாதையில் தங்க வைத்துள்ளனர். மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இரவு முழுவதும் இங்கு மைனஸ் 14 டிகிரிக்கும் குறைவாக உள்ள கடும் குளிரில் சுமார் 500 பேர் வரை சுரங்கப்பாதையில் தங்கி உள்ளோம்.
இதில் தமிழகத்தில் செங்கல்பட்டு, தூத்துக்குடி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் இங்கு உள்ளனர். அவர்களும் இது போன்ற சுரங்கப்பாதையில் இரவு முழுவதும் கடும் வேதனையில் தங்கி உள்ளனர். அதிலும் மாணவிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது.
தற்போது இங்கு போதிய உணவு இல்லை. இதனால் நாங்கள் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த உணவுகளை வைத்து சாப்பிட்டு வருகிறோம். வெளியில் உணவு, தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது. இதுதவிர இங்குள்ள ஏ.டி.எம். மிஷின் எதுவும் செயல்பாடு இல்லாததால் வெளியில் சென்று பணம் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். இங்கிருந்து தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல வேண்டுமானால் கூட விமான நிலையங்களில் குண்டு வெடிப்பு காரணமாக விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் தற்போது சொந்த நாட்டிற்கு கூட செல்ல முடியாத நிலையில் உயிர் பயத்துடன் உள்ளோம்.
இங்கு தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களை மத்திய, மாநில அரசு உடனடியாக காப்பாற்றி சொந்த ஊருக்கு வர உதவி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.
Related Tags :
Next Story