‘‘சைரன் சத்தத்தை கேட்டாலே அதிர்ச்சி’’ - உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவர்கள் தகவல்
‘‘விடுதி பதுங்கு குழியில் அச்சத்துடன் முடங்கி கிடக்கிறோம், பதுங்கு குழியில் பதுங்கி இருப்பதால் சைரன் சத்தத்தை கேட்டாலே அதிர்ச்சி அடைந்து வருவதாக’’ உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாணவர்கள் தெரிவித்து உள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஒடப்பவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ், விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தி. இவர்களுடைய மகன் அஜித்ராஜ் (வயது 21) உக்ரைன் நாட்டில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு அஜித்ராஜ் உள்பட ஏராளமான தமிழக மாணவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.இந்தநிலையில் அஜித்ராஜை பத்திரமாக மீட்க கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர் காளிமுத்து ஆகியோர் நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.
இதுகுறித்து துரைராஜ் கூறுகையில், ‘‘எனது மகன் அஜித்ராஜ் உக்ரைன் நாட்டிற்கு படிக்க சென்று 3 மாதங்கள் ஆகிறது. விடுதி கட்டிடத்தின் தரைத்தளத்தின் அடிப்பகுதியில் அவன் மற்றும் சக மாணவர்கள் தங்கி உள்ளனர். அங்கு சரிவர உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகள் கிடைக்கவில்லை.
இன்று காலை (அதாவது நேற்று) வாட்ஸ்-அப் மூலம் பேசினான். சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. எனது மகனை பத்திரமாக மீட்க மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதேபோல் மாணவரின் தாய் ஆனந்தியும் கண்ணீர் மல்க தனது மகனை காப்பாற்றும்படி கூறினார். மேலும் மனுவை கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளரிடம் (பொது) அளித்தனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாணவர் அஜித்ராஜிடம் தினத்தந்தி நிருபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘நான் உக்ரைன் நாட்டில் வினிஸ்டா நகரில் மருத்துவக்கல்லூரி விடுதியில் தங்கி உள்ளேன். என்னுடன் தமிழக மாணவர்கள் 60-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். எங்களுக்கு சாப்பாடு எதுவும் சரிவர கிடைக்கவில்லை. பிரெட், பிஸ்கெட் ஆகியவை தான் சாப்பிட்டு வருகிறோம். தண்ணீர் வசதி கூட இல்லை.
மருத்துவக்கல்லூரி நிர்வாகமும் எந்த வசதியும் ஏற்படுத்தவில்லை. நாங்களே உணவு மற்றும் தண்ணீரை சேகரிக்கிறோம். எங்களை விடுதியை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். அதனால் நாங்கள் வெளியில் செல்லவில்லை. விடுதியிலேயே அச்சத்துடன் முடங்கி கிடக்கிறோம். சில நேரங்களில் பயங்கர சத்தம் கேட்பது உண்டு.
போர் விமானங்கள் எதுவும் சென்றால் நகரில் முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையில் சைரன் சத்தம் எழுப்பப்படும். இந்த சத்தம் தொடர்ந்து எழுப்பப்பட்டால் நாங்கள் அனைவரும் உடனடியாக பதுங்கு குழிக்கு சென்றுவிடுவோம். கடந்த 2 நாளில் அவ்வப்போது இந்த சத்தம் தொடர்ந்து எழுப்பப்பட்டது. அப்போது நாங்கள் விடுதியில் பதுங்கு குழியில் பதுங்கி கொண்டோம். அதனால் சைரன் சத்தத்தை கேட்டாலே எங்களுக்கு அதிர்ச்சி தான். எங்களை பத்திரமாக மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
மாணவர் அஜித்ராஜூடன் சென்னை, திருவண்ணாமலையை சேர்ந்த மாணவர்களும் தங்கி உள்ளனர். அவர்கள் ஒரு வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் பெற்றோருக்கு அனுப்பி உள்ளனர். இதில் அங்கு நிலைமை மோசமாகி வருவதால் எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை. பயமாக உள்ளதாகவும், விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த நெய்னா முகமது மகன் முகமது சமி (17), கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஜகுபர் சாதிக் மகன் ரியாஸ் கான் (20) ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர். இதுகுறித்து அவர்களது பெற்றோர் கூறியதாவது:-
உக்ரைனில் போர் நடந்து வருவதால் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். தற்போது ஒரு சுரங்கப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உக்ரைன் நாட்டில் தவிக்கும் மாணவர்கள் தாயகம் திரும்பும் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக அனைத்து பெற்றோர் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை மத்திய- மாநில அரசுகள் உடனடியாக மீட்டு தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக உக்ரைன் சென்றவர்கள் விவரம் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story