உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் ராகுல்காந்தி நாளை கலந்துரையாடல்
நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களை, ராகுல்காந்தி நாளை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டை சத்யமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெற்று இருக்கிறோம். இந்த கூட்டணி கொள்கை ரீதியானது. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்கள் 5 ஆயிரம் பேரை மீட்டு வர மத்திய அரசிடம் விமானம் இல்லை என்பது மோடி அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.
சென்னையில் நடைபெற உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை தலைவர் ராகுல்காந்தி வெளியிட உள்ளார். இதற்காக நாளை (28-ந்தேதி) சென்னை வரும் ராகுல்காந்தி சத்யமூர்த்தி பவனில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசனை செய்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை தமிழக கிராமப்புறங்களில் இருந்து பலப்படுத்த கருத்து கேட்டு கலந்துரையாடுகிறார்.
இந்தியாவை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி தான் மிகப்பெரிய தேசிய கட்சி. 60 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்து இருக்கிறோம். 7 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை என்பது ஒரு அனுபவமே. தி.மு.க.விடம் மேயர் பதவி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒரு நாள் காங்கிரஸ் கட்சி, கண்டிப்பாக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அமரும் மேடையில், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க தலைவர் வி.சி.முனுசாமி அமர்ந்து இருந்தார். இதற்கு, காங்கிரஸ் நிர்வாகி பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து ஒருமையில் பேசினார். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story