ஒரு வேளை சாப்பாடுதான் கிடைக்கிறது: ‘குண்டுகள் வெடிப்பதால் பாதாள அறைகளுக்குள் முடங்கி கிடக்கிறோம்'


ஒரு வேளை சாப்பாடுதான் கிடைக்கிறது: ‘குண்டுகள் வெடிப்பதால் பாதாள அறைகளுக்குள் முடங்கி கிடக்கிறோம்
x
தினத்தந்தி 27 Feb 2022 4:48 AM IST (Updated: 27 Feb 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதும் பாதாள அறைக்குள் சென்று பதுங்கிக் கொள்வோம் என்று உக்ரைனில் சிக்கித்தவிக்கும் குமரி மாணவ-மாணவிகள் உருக்கமாக கூறினர்.

நாகர்கோவில்,

ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைனில் தமிழக மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர். அவர்கள் உள்பட இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் கீழராமன்புதூரை சேர்ந்த மதிஷாபாதி, நித்திரவிளையை சேர்ந்த ஸ்ருதி, குளப்புறத்தை சேர்ந்த அஷிதா, கருங்கல்லை சேர்ந்த ஆஷிகா, அழகப்பபுரத்தை சேர்ந்த ஆகாஷ் ஐசக் விஷால் உள்ளிட்ட குமரி மாவட்ட மாணவ, மாணவிகள் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார்கள். தற்போது போரினால் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இதில் சில மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் பேசிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

உக்ரைனில் போர் நடக்கும் சூழ்நிலையில் நாங்கள் இருக்கும் இடம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் நாங்கள் வசிக்கும் இடத்தில் குடிநீர் வினியோகம் இல்லை. ஒருவேளை சாப்பாடு தான் கிடைக்கிறது. ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க முடியவில்லை. எல்லைப்பகுதிக்கு எங்களை அழைத்துச் செல்ல இந்திய தூதரம் முயற்சி செய்து வருகிறது.

ஆனால் கொஞ்சம் தாமதம் ஆகிறது. ஏனென்றால் நகரத்தில் உள்ள பஸ்கள் மீதும் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அதனால் போக்குவரத்து வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் உக்ரைன் மக்களே அச்சத்தில்தான் இருக்கின்றனர். இதற்கிடையே இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ரஷிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தும்போதும், குண்டுகள் வெடிக்கும்போது சைரன் ஒலிக்கும். உடனே நாங்கள் பாதாள அறைகளுக்குச் சென்று பதுங்கிக் கொள்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உக்ரைனின் வின்னிஸ்டியா மாவட்டத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்த சாயி சோனு (21) என்ற 3-ம் அண்டு மருத்துவ மாணவி தவித்து வருகிறார்.

இதற்கிடையே உக்ரைனில் போர் ஏற்படுவதற்கு முன்னரே சொந்த ஊர் திரும்பிய ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த மருத்துவ மாணவி கரிசினி என்ற மாணவி, உக்ரைன் தலைநகர் கீவில் போரால் பாதாள அறைகளில் தஞ்சம் அடைந்து உள்ள தனது தோழிகள் மற்றும் நண்பர்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம் நலம் விசாரித்துடன் பதற்றம் அடையாமல் தைரியத்துடன் இருக்கும்படி ஊக்கம் தெரிவித்ததாக கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஒடப்பவிடுதி கிராமத்தை சேர்ந்த அஜித்ராஜ் (வயது 21), கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த முகமது சமி (17), கோபாலப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரியாஸ் கான் (20) ஆகியோர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர். அவர்களும் உக்ரைனில் போரால் பாதாள அறைகளில் பரிதவித்து வருகிறோம் என்று தெரிவித்ததாக அந்த மாணவர்களின் பெற்றோர் தெரிவித்தனர்.

Next Story