எங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்டுத் தாருங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
உக்ரைனில் குண்டு மழைக்குள் சிக்கியுள்ள தங்கள் பிள்ளைகளை பத்திரமாக மீட்டுத்தர விரைந்து நடவடிக்கை எடுங்கள் என்று பெற்றோர் கண்ணீர் மல்க மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
சென்னை,
உக்ரைனில் சிக்கி உள்ள சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களின் பெற்றோர் அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரடியாக வருகை தந்து, தங்களின் பிள்ளைகளின் நிலைமை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்வதுடன், அவர்களை பத்திரமாக மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை கண்ணீர் மல்க வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, எழிலகத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு நேற்று வருகை தந்த சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த மாலினி என்ற பெண் கூறியதாவது:-
எனது மகள் பி.ஹர்ஷினி உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள சர்வதேச மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது, அங்கு குண்டுமழை பொழிந்து வருகிறது. அதனால், அங்குள்ள பாதாள அறையில் பதுங்கி இருக்கிறாள். இணையதள வசதி தெளிவாக கிடைப்பது இல்லை. எனவே, எப்போதாவது வாய்ப்பு பார்த்து வெளியில் வந்து எங்களிடம் வாட்ஸ்-அப்பில் பேசுகிறாள்.
தங்கள் கல்லூரியில் இந்தியர்கள் இருக்கிறார்கள் என்பதை தெரிவிப்பதற்காக கல்லூரியின் மேலே இந்திய தேசிய கொடி பறக்கவிட்டுள்ளதாகவும் தெரிவித்தாள்.
தற்போது உக்ரைனில் சிக்கி இருப்பவர்களை பஸ் மூலம் போலந்துக்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் மூலம் நம் நாட்டிற்கு அழைத்து வர வேண்டும். எனவே, போர் நின்ற பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதுவரை அவர்களை அங்கேயே பாதுகாப்பாக இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படியாவது தமிழக மக்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையில் தான் நாட்களை கடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்திருந்த சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்த பிரகாஷ் என்பவர்உக்ரைனில் தவிக்கும் தனது தங்கை சிந்துவையும், தனது தாய் மஞ்சுளாவுடன் வருகை தந்த சென்னை நத்தம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்திகா தனது சகோதரர் நிதீசையும், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தஷாஜிதா மகன் பஷில் அலாவுதீனையும் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு அழைத்துவர வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story