ரூ.2 லட்சம் மோசடி செய்த விவசாயி அடித்துக் கொலை
திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சத்தை மோசடி செய்த விவசாயியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 50). இவருக்கும் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே காங்கியனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை (64) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏழுமலை, கோபாலிடம் எனக்கு அரசு அதிகாரிகள் பலரை தெரியும். யாருக்கேனும் அரசு வேலை வேண்டுமானால் சொல்லுங்கள், நான் வேலை வாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். அதை உண்மை என நம்பிய கோபால் தனது மகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தரும்படி ஏழுமலையிடம் கூறியுள்ளார். அதற்காக அவர் ரூ.2 லட்சத்தை, ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். ஆனால் ஏழுமலை, கோபாலின் மகளுக்கு வேலை வாங்கி தரவில்லை. மேலும் வாங்கிய ரூ.2 லட்சத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் கோபால், தனது மகன் சிவா மற்றும் மனைவி விசாலாட்சி ஆகியோருடன் கடந்த 23-ந்தேதி ஏழுமலையின் வீட்டுக்கு சென்று அவரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபால், சிவா, விசாலாட்சி ஆகியோர் ஏழுமலையை சரமாரியாக தாக்கியதாக கூறப் படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து கோபால், சிவா, விசாலாட்சி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story