சென்னையில் ‘ஏர்கூலரில்’ ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து: 2 வயது பெண் குழந்தை உடல் கருகி சாவு


சென்னையில் ‘ஏர்கூலரில்’ ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து: 2 வயது பெண் குழந்தை உடல் கருகி சாவு
x
தினத்தந்தி 27 Feb 2022 4:59 AM IST (Updated: 27 Feb 2022 4:59 AM IST)
t-max-icont-min-icon

‘ஏர்கூலரில்’ மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிலில் தூங்கிய 2 வயது பெண் குழந்தை, தாயின் கண் எதிரேயே உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த கவுல்பஜார், யசோதா நகரைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சங்கீதா(வயது 25). இவர்களுக்கு 2 வயதில் பிரஜிதா என்ற பெண் குழந்தை இருந்தது.

நேற்று மாலை 3 மணியளவில் சங்கீதா, வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலில் குழந்தை பிரஜிதாவை தூங்க வைத்துவிட்டு, ‘ஏர்கூலரை’ ஆன் செய்துவிட்டு வீட்டு வாசலில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து வீட்டின் உள்ளே இருந்து புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சங்கீதா, வீட்டின் உள்ளே அலறி அடித்து ஓடினார். வீட்டின் படுக்கை அறை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அவரால் அறைக்குள் செல்ல முடியவில்லை.

தனது கண் எதிரேயே குழந்தை பிரஜிதா படுத்து இருந்த கட்டில் தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு சங்கீதா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைக்க முயன்றபோது அவர்களால் அறைக்குள் செல்ல முடியவில்லை.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் படுக்கை அறையின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து அதன் வழியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து குழந்தையை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

இதையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, தீ விபத்தில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை பிரஜிதா, உடல் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தாள்.

தனது கண் எதிரேயே மகள் உடல் கருகி பலியாகி கிடப்பதை கண்டு சங்கீதா கதறி அழுததை பார்க்க பரிதாபமாக இருந்தது.

‘ஏர்கூலரில்’ ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபற்றி சங்கர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story