மனைவியின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்த தொழிலாளி...
பெங்களூரு அருகே, மாயமான நிலையில் மனைவியின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு இறந்து விட்டதாக தொழிலாளி இரங்கல் தெரிவித்த சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா உடனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிகிருஷ்ணா. தொழிலாளியான இவர் வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லீலாவதி.
இவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோல நேற்று முன்தினம் இரவு ஒரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்றது தொடர்பாக கணவன், மனைவி இடையே சண்டை உண்டானது. இதனால் கோபித்து கொண்ட லீலாவதி வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் லீலாவதி இறந்து விட்டதாகவும், அவரது மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறி முனிகிருஷ்ணா தனது முகநூல் பக்கத்தில் லீலாவதி புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லீலாவதியின் குடும்பத்தினர், முனிகிருஷ்ணா வீட்டிற்கு சென்று கேட்ட போது லீலாவதி எங்கேயோ சென்று விட்டதாக கூறினார்.
மேலும் லீலாவதியின் செல்போன் எண்ணும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லீலாவதியை கொலை செய்து விட்டதாக முனிகிருஷ்ணா மீது தொட்டபள்ளாப்புரா போலீஸ் நிலையத்தில் லீலாவதியின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அதே நேரத்தில் லீலாவதி மாயமாகி விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் முனிகிருஷ்ணாவும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். இதுவரை லீலாவதியின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story