காரைக்காலை சேர்ந்த 4 மாணவர்கள் சுரங்கபாதையில் தவிப்பு


காரைக்காலை சேர்ந்த 4 மாணவர்கள் சுரங்கபாதையில் தவிப்பு
x
தினத்தந்தி 27 Feb 2022 11:20 PM IST (Updated: 27 Feb 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

போர் நடக்கும் உக்ரைனில் காரைக்காலை சேர்ந்த 4 மாணவர்கள் சுரங்கபாதையில் தவிக்கின்றனர். அவர்களை மீட்கக்கோரி பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

போர் நடக்கும் உக்ரைனில் காரைக்காலை சேர்ந்த 4 மாணவர்கள் சுரங்கபாதையில் தவிக்கின்றனர். அவர்களை மீட்கக்கோரி பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
உக்ரைனில் போர்
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த பிரவீனா, கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த சந்துரு, பி.எஸ்.ஆர். நகரை சேர்ந்த கார்த்தி விக்னேஷ், சிவசங்கரி ஆகியோர் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இதற்கிடையே உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அவர்கள் பாதாள அறை மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்கள் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சுரங்கப்பாதையில் தவிப்பு
நாங்கள் உக்ரைனில் கார்க்கிவ் என்னும் தனியார் கல்லூயில் மருத்துவம் படித்து வருகிறோம். இங்கு தற்போது நடந்து வரும் இந்த அசாதரண சூழ்நிலையில் சிக்கி உள்ளோம். தற்பொழுது கூட நாங்கள் பாதாள அறையில்தான்  தஞ்சம் அடைந்துள்ளோம். நாங்கள் இருக்கும் இடத்தில் குறைந்தபட்சம் 5 ஆயிரம் இந்தியர்களாவது இருப்போம். நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து ரஷியா எல்லை வெறும் 40 கி.மீ. தூரத்தில் தான் இருக்கிறது.
தொடர்ந்து குண்டு வெடிக்கும் சத்தம் அதிகமாக கேட்கிறது. இதனால் இரவு, பகல் எந்நேரமும் தூங்க கூட இயலவில்லை. கல்லூரி விடுதிகளில் கூட எங்களால் இருக்க முடியவில்லை. வெறும் பிரட், தண்ணீரை குடித்து உயிர் வாழ்கிறோம்.
இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஆறுதல்
இந்தநிலையில் மாணவர்களை உடனடியாக மீட்கக்கோரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோருக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே உக்ரைனில் சிக்கி தவிக்கும் காரைக்காலை சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாணவர்களை அழைத்து வர கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், முதல்-அமைச்சர் ரங்கசாமியும் மத்திய அரசு மூலமாக மேற்கொண்டுள்ள முயற்சிகளை மாணவர்களின் பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி தைரியமாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அதேபோல் எம்.எல்.ஏ.க் கள் நாஜிம், திருமுருகன் ஆகியோரும்  மாணவர்களின் இல்லத்துக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story