தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்


தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Feb 2022 4:48 AM IST (Updated: 28 Feb 2022 4:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழ்நாட்டில் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு 11 வகையான தடுப்பூசிகள் போடப்படுகிறது. அந்த வகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இந்த மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த முகாம் மூலம் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள், விமான நிலையங்களில் பயணவழி மையங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், நடமாடும் குழுக்கள் மூலம் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

56.18 லட்சம் குழந்தைகள்

அதன்படி, தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற முகாம் மூலம் 56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு வீடு வீடாக சென்று விடுபட்ட அனைத்து குழந்தைகளையும் கண்டறிந்து போலியோ சொட்டு மருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பயண நிலையங்களிலும் 3 நாட்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

2 லட்சம் பேர்

சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாமில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க. எம்.எல்.ஏ. த.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story