தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள்
உக்ரைனில் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களிடம் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்று வீடியோ காலில் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.
உக்ரைனில் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களிடம் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்று வீடியோ காலில் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.
23 மாணவர்கள்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. தற்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது. உக்ரைனில் படிக்க சென்ற புதுச்சேரியை சேர்ந்த 23 பேர் தற்போது அங்கு சிக்கி தவிப்பது தெரியவந்துள்ளது.
புதுச்சேரியை சேர்ந்த 14 பேர், காரைக்காலை சேர்ந்த 5 பேர், மாகியை சேர்ந்த 3 பேர், ஏனாமை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 23 மாணவ, மாணவிகள் உக்ரைனில் உள்ளனர். கடும்போர் நடந்து வரும் நிலையில் அவர்கள் பதுங்கு குழிகளில் தங்கியுள்ளனர்.
ரங்கசாமியுடன் சந்திப்பு
மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் செல்போன் மூலம் அவர்கள் பெற்றோரையும் சரிவர தொடர்புகொள்ள முடியாமல் தவிக்கின்றனர். போதிய உணவு இல்லாமலும் பசியால் வாடுகின்றனர்.
இந்தநிலையில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது செல்வகணபதி எம்.பி., கலெக்டர் வல்லவன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆறுதல் கூறினார்
முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பெற்றோர், தங்கள் குழந்தைகளை தொடர்புகொள்ள கூட முடியாததை தெரிவித்து வருத்தமடைந்தனர். அவர்களை எப்படியாவது மீட்டுவர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். அவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆறுதல் கூறினார்.
மேலும் உக்ரைனில் உள்ள மாணவ, மாணவிகளிடமும் முதல்-அமைச்சர் ரங்கசாமி செல்போன் மூலம் வீடியோகாலில் பேசினார். அப்போது அவர்கள் தாங்கள் படும் சிரமத்தை ரங்கசாமியிடம் தெரிவித்தனர். தங்களை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
தைரியமாக இருங்கள்
அவர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, மாணவர்களை மீட்க பிரதமர், வெளியுறவுத்துறை மந்திரியை தொடர்புகொண்டு வருவதாக தெரிவித்தார். மாணவர்கள் நம்பிக்கை இழக்காமல் தைரியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், இணை மந்திரி முரளிதரன் ஆகியோரை தொடர்புகொண்டு புதுச்சேரி மாணவர்களை அழைத்து வர உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
உணவு வசதி
அந்த கடிதத்தில், புதுவை மாணவர்களை விரைவாக மீட்டு வரவேண்டும் என்றும், அதுவரை அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர தூதரகம் மூலமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story