ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஜெயக்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் கோர்ட்டு மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், எனக்கு எதிராக புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். இந்த சூழலில் என் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையிலும் அவருக்கு காயங்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதை கருத்தில் கொள்ளாமல் கீழ் கோர்ட்டு எனது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
இந்த ஜாமீன் மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. நாளைய வழக்குகளுக்கான பட்டியல் தயாராகிவிட்டதால் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story