புதுக்கோட்டை சிறுவன் பலியான வழக்கு:‘‘துப்பாக்கி குண்டு ரகத்தின் ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’’- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி


புதுக்கோட்டை சிறுவன் பலியான வழக்கு:‘‘துப்பாக்கி குண்டு ரகத்தின் ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’’- போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
x
தினத்தந்தி 2 March 2022 12:13 AM IST (Updated: 2 March 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலியான வழக்கில் குண்டு ரகத்தின் ஆய்வு அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை, 
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் பலி
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந் தேதி போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து வெளியேறிய குண்டு தலையில் பாய்ந்ததில் சிறுவன் புகழேந்தி (வயது 11) படுகாயமடைந்தான். இதையடுத்து, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் சிறுவன் தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி கடந்த ஜனவரி மாதம் 3-ந் தேதி பரிதாபமாக இறந்தான்.
இதையடுத்து, சிறுவனின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. சம்பவத்தன்று துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் திருச்சி மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும், திருச்சி மத்திய மண்டல போலீசாரும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குண்டு ரகம்
இந்த சம்பவம் தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இலுப்பூர் ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்தார். சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு யார் சுட்டது? என்பதை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குண்டு மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்குரியதா? அல்லது திருச்சி மத்திய மண்டல போலீசாருக்குரியதா? என்பதை கண்டறியப்பட உள்ளது.
இந்த பரபரப்பான சம்பவத்தினால் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை தற்காலிகமாக மூடி மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில், அதனை நிரந்தரமாக மூட பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு சமீபத்தில் வழக்கு ஒன்றில் மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்திருந்தது.
அறிக்கைக்காக காத்திருப்பு
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு ரகம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஒரு மாத கால அவகாசம் கேட்டனர். இதில் 15 நாட்கள் முடிந்துள்ளது. இன்னும் 15 நாட்கள் உள்ளன.
ஆய்வின் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அந்த அறிக்கை வந்த பின்னர் தான் அந்த குண்டு எந்த ரக துப்பாக்கியில் இருந்து பாய்ந்தது, அதனை யார் சுட்டது என்பது தெரியவரும். அதன்பின் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும். அதனால் அந்த அறிக்கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்’’ என்றார். அந்த அறிக்கை வந்த பின்னர் இந்த வழக்கு சூடுபிடிக்கும் என தெரிகிறது.

Next Story