உக்ரைனில் சிக்கி தவித்த புதுச்சேரி மாணவி நாடு திரும்பினார் விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை வரவேற்றார்
உக்ரைனில் சிக்கி தவித்த புதுச்சேரி மாணவி நாடு திரும்பினார் விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை வரவேற்றார்
புதுச்சேரி
உக்ரைனில் சிக்கி தவித்த புதுச்சேரி மாணவி நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார்.
புதுச்சேரி மாணவி
ரஷியா போர் தொடுத்துள்ள உக்ரைனில் புதுவையை சேர்ந்த 23 மருத்துவ மாணவ, மாணவிகள் சிக்கி தவித்தனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அவர்களது பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதமும் எழுதினார்.
இந்தநிலையில் வீராம்பட்டினத்தை சேர்ந்த தெய்வசிகாமணி மகளான மருத்துவ மாணவி ரோஜா சிவமணி பத்திரமாக மீட்கப்பட்டார். அவர் ஹங்கேரியில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார்.
பின்னர் நேற்று நள்ளிரவில் விமானத்தில் சென்னை வந்து புதுச்சேரி திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றார். இன்று காலை முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் மாணவி ரோஜா சிவமணி சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இறுதியாண்டு மாணவியான ரோஜா சிவமணி இறுதி தேர்வுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் உக்ரைனில் இருந்து புதுச்சேரி திரும்பியுள்ளார்.
இதுகுறித்து மாணவி ரோஜா சிவமணி கூறியதாவது:-
ராணுவம் குவிப்பு
உக்ரைனில் உஷாரத் பல்கலைக்கழகத்தில் நான் படித்து வருகிறேன். வெளியில் வீடு எடுத்து தங்கியுள்ளேன். என்னுடன் தமிழகம் மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த மாணவிகள் தங்கி இருந்தனர்.
நாங்கள் வசிக்கும் பகுதியில் போர் இன்னும் தொடங்கவில்லை. இந்த பகுதியானது உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ளது. கடந்த 28-ந்தேதி உக்ரைனை விட்டு வெளியேற தொடங்கினோம். எங்கள் பகுதியில் தற்போது உக்ரைன் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
தொந்தரவு தரவில்லை
அங்கிருந்து 3 பஸ்களில் ஹங்கேரிக்கு மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். 18 மணி நேர பயணத்துக்குப்பின் நாங்கள் ஹங்கேரியை அடைந்தோம். இடையில் 2 இடங்களில் எங்களது பாஸ்போர்ட்டுகளை ஆய்வு செய்தனர். மற்றபடி எங்களுக்கு யாரும் தொந்தரவு தரவில்லை.
ஹங்கேரியில் இருந்து டெல்லி வந்து அங்கிருந்து சென்னை வந்தோம். சென்னை விமான நிலையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் எங்களை வரவேற்றார். உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் மீண்டு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் அனைத்து மாணவ, மாணவிகளும் பத்திரமாக தாயகம் திரும்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
உக்ரைனில் இருந்து புதுச்சேரி திரும்பிய மாணவி ரோஜா சிவமணியை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த மாணவி ரோஜா சிவமணி தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் மீட்கப்பட்டு வந்து இருப்பது மிகுந்த மன ஆறுதலை அளிக்கிறது. இருந்தபோதிலும் நமது மாணவர்கள் அனைவரையும் மீட்டெடுத்த பின்னரே மனம் நிம்மதி அடையும். இந்தியர்கள் அனைவரையும் மீட்டெடுக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மத்திய அரசின் தீவிர முயற்சியால் மாணவர்கள் பாதுகாப்பாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். 4 மத்திய மந்திரிகள் இந்தியர்கள் அனைவரையும் மீட்க சென்றுள்ளனர். அதற்காக பிரதமருக்கு அனைவரது சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியை சேர்ந்த 23 மாணவர்களின் பட்டியல் கிடைத்துள்ளது. மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். புதுவை அரசு தொடர்ந்து வெளியுறவுத்துறையுடன் தொடர்பில் இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story