அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களை முற்றுகையிட்ட தி.மு.க.வினரால் பரபரப்பு போலீசார் குவிப்பு
அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் பதவியேற்ற அ.தி.மு.க. கவுன்சிலர்களை தி.மு.க.வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
அன்னவாசல்:
அன்னவாசல் பேரூராட்சி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 8 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதோடு மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளரின் ஆதரவோடு 9 உறுப்பினர்களின் ஆதரவை பெற்று அ.தி.மு.க. அங்கு தலைவர் பதவியை கைப்பற்றும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் மதியம் 1½ மணி வரையிலும் 8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினர் பதவியேற்க வராததால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க.வினர் பதவிப்பிரமாணம்
இதனிடையே 8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் என 9 பேரும் தாங்கள் பதவியேற்க வரும் போது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதன் அடிப்படையில் அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் வாகனங்கள் படைசூழ 8 அ.தி.மு.க. உறுப்பினர்கள் மற்றும் 1 சுயேச்சை உறுப்பினர் ஆகிய 9 பேரும் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
போலீசாருடன் வாக்குவாதம்
அப்போது வெளியே திரண்ட புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையிலான தி.மு.க.வினர், வார்டு உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடத்தி வைத்திருப்பதாகவும், அவர்களை அவரவர் விருப்பப்படி வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேரூராட்சி அலுவலக கதவுகளை தள்ளிக்கொண்டு உள்ளே வர முற்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் சம்பவ இடத்திற்கு வந்து பதற்றத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
கடத்தியதாக புகார்
இதனிடையே போலீசாரின் பாதுகாப்போடு பேரூராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர வைக்கப்பட்டு இருந்த 9 உறுப்பினர்களில் 3-வது வார்டு கார்த்திக், 13-வது வார்டு விஜயசாந்தி ஆகியோரை குடும்பத்தினரின் அனுமதியின்றி கடத்தி வைத்து இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளதாக போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த இரண்டு கவுன்சிலர்களும் தங்களை யாரும் கடத்தவில்லை என்றும் தங்களின் விருப்பத்தின் பேரில்தான் வெளியில் சென்றுவிட்டு தற்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள வந்துள்ளதாகவும் எழுத்துபூர்வமாக வாக்குறுதி அளித்தனர்.
தள்ளு-முள்ளு
இதனையடுத்து அவர்களை வாகனத்தில் அனுப்பி வைக்க போலீசார் முயன்றபோது தி.மு.க.வினர், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் செல்ல இருந்த கார்களை வழிமறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தி.மு.க.வினைரை போலீசார் அப்புறப்படுத்தி விட்டு, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சென்ற வாகனத்தை அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.வினர் போலீசார் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
பின்னர் தி.மு.க.வினர் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு புதுக்கோட்டை-விராலிமலை நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அப்போது சுயேச்சை உறுப்பினர் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆட்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், போலீசார் அவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், தேர்தலை முறையாக நடத்த வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
அ.தி.மு.க. மற்றும் சுயேச்சை உறுப்பினர்களை சுதந்திரமாக விடாமல் சிலர் கடத்தி வந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாகவும், இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றம்சாட்டி தி.மு.க.வினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே போலீசாரை கண்டித்து அன்னவாசல் பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ரங்கசாமி என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை போலீசார் மீட்டு ஆசுவாசப்படுத்தினர்.
தி.மு.க. உறுப்பினர் கடத்தல்?
போராட்டத்தின் போது தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. உறுப்பினர் ஒருவரையும் சிலர் கடத்தி வைத்திருப்பதாகவும், அவரை உடனடியாக மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தேர்தலை முறையாக நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
வேன் கண்ணாடி உடைப்பு
அ.தி.மு.க., சுயேச்சை உள்ளிட்ட 9 கவுன்சிலர்கள் ஒரு வேனில் போலீஸ் பாதுகாப்புடன் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். வேனில் இருந்து அவர்கள் இறங்கியதும் அந்த வேன் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது மர்மநபர்கள் வேனின் இரண்டு டயர்களை பஞ்சராக்கி கண்ணாடியை உடைத்தனர்.
Related Tags :
Next Story