ஆசிரியர் பாலியல் தொல்லை... தனியார் பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
விருத்தாசலத்தில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் தனியார் பள்ளி முதல் மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவி நேற்று முன்தினம் காலை, பள்ளியின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்ததும் சக மாணவர்கள், ஆசிரியர்கள் பதற்றமடைந்தனர். உடனே அந்த மாணவியை மீட்டு, விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அந்த மாணவிக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி, குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக முன்னுக்கு பின் முரணாக கூறியதாக தெரிகிறது.
தொடர்ந்து அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில், அதே பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வரும் வேப்பூர் அருகே உள்ள வண்ணாத்தூர் கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி மகன் சாமிநாதன் (வயது 32) என்பவர், கடந்த ஒரு மாதமாக மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி வந்துள்ளார். மேலும், கடந்த 4 நாட்களுக்கு முன் மாணவியிடம் பாலியல் தொல்லையிலும், சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி, இது பற்றி பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக தோழியிடம் கூறி அழுதுள்ளார். அதைத்தொடர்ந்து, மனஉளைச்சலில் இருந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து அந்த மாணவி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சாமிநாதனை கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story