புதுகோட்டை அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் மோதல் - கல்வீச்சு போலீஸ் தடியடி
புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தேர்தலில் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் திமுக கூட்டணி மற்றும் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றார். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இந்நிலையில், அன்னவாசல் பேரூராட்சியில் மார்ச் 2-ம் தேதி பதிவியேற்பு விழா நடைபெற்றது. முற்பகலில் திமுகவைச் சேர்ந்த 5 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேரும் பதவியேற்றனர்.
பிற்பலில் விராலிமலையில் இருந்து சுமார் 35-க்கும் மேற்பட்ட கார்களில் அதிமுக உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் சுயேச்சையாக வெற்றி பெற்ற ஒருவர் என மொத்தம் 9 பேரையும் அதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக அழைத்து வந்து பதவியேற்றனர்.
இந்நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து, காலை 7 மணிக்கெல்லாம் அதிமுகவைச் சேர்ந்த 9 கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். திமுகவைச் சேர்ந்த ஒருசில கவுன்சிலர்களும் உள்ளே சென்றனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்தைச் சுற்றிலும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினரும், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினரும் திரண்டனர்.
இரு கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட பேரிகார்டுகளைக் கடந்து திமுகவினர் அலுவலகத்துக்குள் செல்ல திமுகவினர் முயற்சித்தனர்.
தேர்தலில் அதிமுகவினர் - திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதால் இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே தொடர் பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம், தேர்தலை அமைதியா நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படியே தேர்தல் நடத்தப்படுவதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
Related Tags :
Next Story