தென்மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


தென்மாவட்டங்களில் சசிகலா சுற்றுப்பயணம் - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 4 March 2022 4:10 PM IST (Updated: 4 March 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

தென்மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சசிகலா, இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

நெல்லை:

முன்னால் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் நெல்லை கே.டி.சி. நகர் வந்தார். அங்கு அவருக்கு ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர். 

அதன்பின்னர் சசிகலா அங்கிருந்து புறப்பட்டு நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாபதி கிராமம் சென்று அங்குள்ள பழம் பெருமை வாய்ந்த விசுவாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் உவரி வழியாக சென்று இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். 

நாளை (5-ந்தேதி) காலை திருச்செந்தூரில் இருந்து காரில் புறப்பட்டு ஸ்ரீவைகுண்டம் வழியாக நெல்லை கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர். சிலை பகுதிக்கு வருகிறார். அங்கு கூடியிருக்கும் திரளான தொண்டர்கள் கொடுக்கும் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.

பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அங்கிருந்து ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் பாபநாசம் மலைப்பகுதிக்கு சென்று அகத்தியர் பாதம் பதித்த இடத்தில் உள்ள அகத்தியர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.

இதைத்தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, கடையநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Next Story