யூரியா உரத்தை ஹெராயின் போதைப்பொருள் என ஏமாற்றி விற்க முயற்சி: 4 பேர் கைது


யூரியா உரத்தை ஹெராயின் போதைப்பொருள் என ஏமாற்றி விற்க முயற்சி: 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 March 2022 9:32 PM IST (Updated: 4 March 2022 9:32 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் யூரியா உரத்தை,ஹெராயின் போதைப்பொருள் என்று ஏமாற்றி விற்பனை செய்ய முயற்சித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, 

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (40). இவர் தன்னிடம் ஹெராயின் போதைப்பொருள் இருப்பதாகவும், அதை விற்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தனது நண்பரான அருண்குமாரிடம் (31) கூறினார். அருண்குமார் இதுபற்றி தமீம் அன்சாரி, முகமது சபி என்ற தனது நண்பர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை மாதவரம் பகுதிக்கு ஹெராயின் போதைப்பொருளுடன் வரும்படி தமீம் அன்சாரியும், முகமது சபியும், அருண்குமாரிடம் கூறினார்கள். அதன்படி1 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் என்று ஒரு பிளாஸ்டிக் பையில் வெள்ளை நிற பவுடர் போன்ற பொருளை எடுத்துக்கொண்டு முத்துராஜாவும், அருண்குமாரும் மாதவரம் பகுதிக்கு வந்தனர். 

இந்த தகவல் கீழ்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனுக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் தனிப்படை போலீசாரை மாதவரம் பகுதிக்கு அனுப்பி வைத்தார். தனிப்படை போலீசார் முத்துராஜா, அருண்குமார் மற்றும் தமீம் அன்சாரி, முகமது சபி ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஹெராயின் என்று கூறப்பட்ட வெள்ளை நிற பவுடர் போன்ற பொருளை கைப்பற்றினார்கள்.

அந்த வெள்ளை நிற பவுடர் உண்மையிலேயே ஹெராயின் போதை பொருளா என்று போலீசார் ஆய்வு செய்த போது அது ஹெராயின் போதைபவுடர் இல்லை என்பதும், தூளாக்கப்பட்ட யூரியா உரம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. யூரியா உரத்தூளை, ஹெராயின் போதைப்பொருள் என்று ஏமாற்றி விற்க முயன்றது அம்பலமானது. முத்துராஜா தான் யூரியா உரத்தை பவுடர்போல அரைத்து ஹெராயின் போதைப்பொருளாக மாற்றியதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

இவர்கள் இந்த போலி ஹெராயின் போதைப்பொருளை கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

Next Story