புலியூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது
இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.
கரூர்,
இந்திய கம்யூனிஸ்டு
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அந்த கட்சி சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலாராணி (வயது 51) என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட இருந்தார்.
நேற்று காலை 9.30 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதற்கு புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் 8-வது வார்டில் வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் தவிர மற்ற அனைவரும் கலந்து கொண்டனர்.
தி.மு.க. வேட்பாளர்
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கலாராணி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பு தி.மு.க. சார்பில் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புவனேஸ்வரிக்கு ஆதரவாக அக்கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்கு 14-வது வார்டு கவுன்சிலர் ரேவதி முன்மொழிந்தார். 12-வது வார்டு கவுன்சிலர் தங்கமணி வழிமொழிந்தார். புவனேஸ்வரியை எதிர்த்து யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கலாராணி தனது ஆதரவாளர்களுடன் வெளியே வந்தார். அப்போது அவரிடம் இதுகுறித்து கேட்டபோது தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் தலைவர் பதவிக்கு எனக்கு முன்மொழிய கவுன்சிலர்கள் இல்லை. மேலும், தி.மு.க. கவுன்சிலர்கள், தலைவர் பதவிக்கு எனக்கு தான் முன்மொழிகிறார்கள் என்று நினைத்து இருந்தேன். இதனால் நான் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. ஆனால் மரபுகளை மீறி தி.மு.க.வினர் புவனேஸ்வரியை முன்மொழிந்து தலைவராக தேர்வு செய்து உள்ளனர். எனவே இதனை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என கூறினார்.
இதனைத்தொடர்ந்து மதியம் 1.30 மணியளவில் துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், 15-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. கவுன்சிலர் அம்மையப்பன் வேட்பு மனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் அவர் வெற்றி பெற்றதாக பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் அறிவித்தார்.
கூட்டணி தர்மத்திற்கு விரோதமானது
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:- புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு மாநில பொதுச்செயலாளர் முத்தரசனும், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டு இருந்தனர். எங்கள் கட்சி வேட்பாளர் கலாராணி, தலைவர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்ய தயாராக இருந்தார். ஆனால் தி.மு.க. நிர்வாகிகள் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், தலைமையின் உத்தரவைமீறி அவர்களாக ஒரு வேட்பாளரை தேர்வு செய்து, முன்மொழிந்து அவரை வெற்றி பெற செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க கூட்டணி தர்மத்திற்கு விரோதமானது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தி.மு.க. கரூர் மாவட்ட செயலாளர், அமைச்சருக்கு தெரியாமல் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. கண்டிப்பாக அவருக்கு தெரிந்திருக்கும். இது தெரிந்தே நடந்துள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இந்த சம்பவம் குறித்து எங்களது தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காமல் கூட்டணி கட்சிகளை மதித்து, தி.மு.க.வினர் செயல்பட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story