விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கிய தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது
x

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றியது. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வி.சி.க.வினரை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் 30 உறுப்பினர்களை கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நகரமன்ற தலைவர் பதவி, தற்போது பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தி.மு.க. கவுன்சிலர்கள் நகரமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நகரமன்ற தலைவர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கி, தி.மு.க. தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை ஏற்றுக்கொள்ளாத தி.மு.க. கவுன்சிலர்கள், மேலும் சில கவுன்சிலர்களுடன் கடந்த 2-ந்தேதி மாலை மாயமானார்கள்.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கிரிஜா திருமாறன் என்பவரை நகரமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

வேனை மறித்து போராட்டம்

நேற்று நகராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தலைவா் பதவிக்கு கிரிஜா திருமாறன் மனுதாக்கல் செய்தார். காலை 9 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ஒரு வேனில் நகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர்.

அப்போது அங்கு திரண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென, கவுன்சிலர்கள் வந்த வேனை மறித்து, அவர்களை நகராட்சி அலுவலகம் செல்லவிடாமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள், கூட்டணி கட்சிக்கு துரோகம் செய்யாதீர்கள் என்று கோஷமிட்டனர். அப்போது வேனில் இருந்து இறங்கி வந்த தி.மு.க. நிர்வாகிகள் சிலரை போராட்டக்காரர்கள் தாக்கினர். இதனால் பரபரப்பு உண்டானது. நிலைமை மோசமானதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இந்த நிலையில், பேச்சுவார்த்தை நடத்த வந்த சபா.ராஜேந்தின் எம்.எல்.ஏ. காரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கினர். அப்போது போலீசார் தாக்கியதால் அவர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

23 ஓட்டுகள் பெற்று வெற்றி

பின்னர் வேனில் இருந்து கவுன்சிலர்கள் இறங்கி, போலீஸ் பாதுகாப்புடன் அலுவலகத்துக்குள் நடந்து சென்றனர். 29-வது வார்டை சேர்ந்த தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார். மொத்தம் 29 கவுன்சிலர்கள் இருந்தனர். அ.தி.மு.க.வை கவுன்சிலர் ஒருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. 29 கவுன்சிலர்களும் தங்களது வாக்கை பதிவு செய்தனர். வாக்கு எண்ணிக்கையில் கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் 23 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் கிரிஜா திருமாறன் 3 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.

உதயேந்திரம் பேரூராட்சி

திருப்பத்தூர் மாவட்டம் உதயேந்திரம் பேரூராட்சியில் தி.மு.க. வெற்றி பெற்ற மகேஸ்வரி என்ற கவுன்சிலர் அ.தி.மு.க.வில் இணைந்து தலைவர் பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனால் வாக்குச்சீட்டுகளை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அங்கு மறைமுக தேர்தலும் நிறுத்தப்பட்டது.

Next Story