குரூப்-1 முதன்மை தேர்வு தொடங்கியது


குரூப்-1 முதன்மை தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 5 March 2022 2:42 AM IST (Updated: 5 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

குரூப்-1 முதன்மை தேர்வு நேற்று தொடங்கியது. முதல் தாள் சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

சென்னை,

துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு துறை துணை பதிவாளர் உள்ளிட்ட குரூப்-1 பதவிகளில் வரும் 66 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ந்தேதி நடந்தது. இந்த தேர்வை 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு, முதன்மை தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதன்படி, முதன்மை தேர்வுக்கு 3 ஆயிரத்து 800 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதம் 4, 5, 6-ந்தேதிகளில் நடைபெறும் என தேர்வை நடத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்தவகையில் நேற்று குரூப்-1 பதவிகளுக்கான முதன்மை தேர்வு தொடங்கியது.

37 மையங்களில் நடந்தது

முதன்மை தேர்வை பொறுத்தவரையில் தாள் 1, தாள் 2, தாள் 3 என பிரித்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 37 மையங்களில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 800 பேர் இந்த தேர்வை எதிர்கொண்டனர். நேற்று முதல் தாள் தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடந்தது.

கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்வு மையத்துக்கு வந்த தேர்வர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். மின்சாதன பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டதோடு, தீவிர பரிசோதனைக்கு பிறகே தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

சற்று கடினம்

அதன்படி, நேற்று நடந்த முதல் தாள் தேர்வில் நவீன வரலாறு, இந்தியாவின் சமூக பிரச்சினை மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் அனைத்து தரப்பினரும் பதிலளிக்கக்கூடிய வகையில் இருந்ததாகவும், பொதுத்திறன் மற்றும் மன திறனை பொறுத்தவரையில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து 2 பகுதிகள் மட்டும் கேட்கப்பட்டதாகவும், மற்ற வினாக்கள் விரிவாக பதில் அளிக்கக்கூடிய வகையில் இருந்ததாகவும், இதன் காரணமாக தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

2-ம் தாள் தேர்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 3-ம் தாள் தேர்வுடன் முதன்மை தேர்வு நிறைவு பெறுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story