கணவருடன் சண்டை: பெற்ற மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த கொடூர தாய் கைது


கணவருடன் சண்டை: பெற்ற மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை செய்த கொடூர தாய் கைது
x
தினத்தந்தி 5 March 2022 8:08 PM IST (Updated: 5 March 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சண்டை ஏற்பட்டதால் பெற்ற மகளுக்கு சூடு வைத்து சித்திரவதை தாயை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் வசிப்பவர் பழனி (வயது 35), இவரது மனைவி மேரி (28). இவர்களுக்கு கார்த்தி (12), பிரவீன்(11) என்ற 2 மகன்களும், துளசி (9), ஜூலி (4) என்ற 2 மகள்களும் உள்ளனர். பழனி சோபா தைக்கும் தொழிலுக்காக சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.

கீழ்பென்னாத்தூர் வீட்டிற்கு வரும்போதெல்லாம் கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும், பின்னர் சென்னைக்கு சென்று விடுவது பழனி வழக்கமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. மகள் ஜூலி தவிர மற்றவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். 

அப்போது மேரி குடும்ப பிரச்சினையை மனதில் வைத்துக் கொண்டு தனது மகள் என்றும் பாராமல் 4 வயது சிறுமி ஜூலியை வீட்டில் உள்ள கத்தியை எடுத்து நெருப்பில் சூடேற்றி அடிக்கடி தொடை, கை, கால் ஆகிய இடங்களில் சூடு வைத்து சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் நல உதவி அலுவலத்திற்கு போன் மூலம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், குழந்தைகள் நல உதவி மாவட்ட  திட்ட  ஒருங்கிணைப்பாளர் அசோக், அணி உறுப்பினர் பாலையா ஆகியோர் கீழ்பென்னாத்தூர் போலீசார் உதவியுடன் சிறுமி ஜூலி வீட்டிற்கு சென்றனர்.

அங்கு ஜூலியன் தந்தை சென்னையில் இருப்பதாகவும், தாய் மேரியிடம் குழந்தைகள் நல  அதிகாரிகள் மற்றும் போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப பிரச்சினை காரணமாக இது போன்று நடந்து விட்டதாக தாய் மேரி அவர்களிடம் ஒப்புக்கொண்டார். 

மேலும் சிறுமி ஜூலியின் உடலில் தீக்காயங்கள் இருப்பதை கண்ட சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் போலீசார் சிறுமியை மீட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து குழந்தைகள் நல உதவி அளித்த  புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்து சிறுமி ஜூலியின் தாய் மேரியை கைது செய்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story