தென் மாவட்டங்களில் சசிகலா 2 நாள் பயணம் - ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு


தென் மாவட்டங்களில் சசிகலா 2 நாள் பயணம் - ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 5 March 2022 8:40 PM IST (Updated: 5 March 2022 8:40 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாநகரத்தில் நுழைந்த போது சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் பைக் பேரணி நடத்தினர்.

நெல்லை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் 2 நாட்கள் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார்.

அவர் நேற்று மதியம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்.பின்னர் மாலையில் சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது இளவரசி, அவருடைய மகன் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று திருச்செந்தூரில் இருந்து காரில் புறப்பட்ட சசிகலா, திருநெல்வேலி வழியாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள இலஞ்சிகுமாரர் கோவிலுக்குச் சென்றார். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, வி.எம்.சத்திரம் என பல்வேறு பகுதிகளில் இருந்த வந்திருந்த தொண்டர்கள் சசிகலாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். 

நெல்லை மாநகரத்தில் நுழைந்த போது சசிகலாவை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் பைக் பேரணி நடத்தினர். பின்னர் நெல்லை கொக்கிரகுளம் பகுதிக்குச் சென்ற சசிகலா, அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஆள் உயர ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

Next Story