‘ரோபோடிக்ஸ்' மூலம் மருத்துவ கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சென்னை ஐ.ஐ.டி


‘ரோபோடிக்ஸ் மூலம் மருத்துவ கண்டுபிடிப்புகளை உருவாக்கும் சென்னை ஐ.ஐ.டி
x
தினத்தந்தி 6 March 2022 4:50 AM IST (Updated: 6 March 2022 4:50 AM IST)
t-max-icont-min-icon

மோஷன் டெக்னாலஜி நிறுவனமான போர்டெஸ்கேப்புடன் இணைந்து, சென்னை ஐ.ஐ.டி. ரோபோடிக்ஸ் மூலம் மறுவாழ்வுக்கான மருத்துவ கண்டுபிடிப்புகளை உருவாக்க இருக்கிறது. இந்த சமூக பொறுப்புணர்வு நிதி திட்டம் வேலூரில் உள்ள முதன்மை மருத்துவக் கல்வி நிறுவனமான கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியையும் உள்ளடக்கியது ஆகும்.

இதன் மூலம் கை குறைபாடுகள் உள்ளவர்களுக்கு புதுமையான ‘அரிபோ' என்ற மறுவாழ்வு ரோபோவை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த ரோபோ பக்கவாதம், மூட்டுவலி, பெரு மூளைவாதம் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியல் மற்றும் தசைக்கூட்டு நிலையில் உள்ளவர்களுக்கு தோள்பட்டை, முழங்கையில் மூட்டு இயக்கத்தை ரோபோ பயிற்றுவிக்கும்.

சென்னை ஐ.ஐ.டி.யின் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டி.டி.கே. மையத்தின் தலைமை பேராசிரியை சுஜாதா சீனிவாசன், வேலூர் சி.எம்.சி.யின் பேராசிரியர் சிவகுமார் பாலசுப்பிரமணியன் ஆகியோரின் தலைமையில் உருவாக்கப்படும் இந்த கண்டுபிடிப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தும்.

இதேபோல், போர்டெஸ்கேப் நிறுவனத்தின் நிதியுதவியுடன், சென்னை ஐ.ஐ.டி.யும், கொல்கத்தாவில் உள்ள நியூரோசயின்ஸ் நிறுவனமும் இணைந்து மற்றொரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அது பக்கவாதம் மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் காயமடைந்த நோயாளிகளின் நடைபயிற்சிக்கான கீழ்மூட்டின் வெளிப்புற எலும்புக்கூடு உருவாக்கும் திட்டம் ஆகும்.

மேற்கண்ட தகவல் சென்னை ஐ.ஐ.டி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story