‘ரெயின் ட்ராப்ஸ்’ சமூக அமைப்பு சார்பில் சாதனை பெண்களுக்கு விருது - சென்னையில் வழங்கப்பட்டது
‘ரெயின் ட்ராப்ஸ்’ சமூக அமைப்பு சார்பில் 16 சாதனை பெண்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
சென்னை,
‘ரெயின் ட்ராப்ஸ்’ சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா, கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 9-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ‘ரெயின்ட் ராப்ஸ்’ அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும், ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா தலைமை தாங்கினார். அமைப்பின் நிறுவனத்தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக மருத்துவம்-சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி கிருத்திகா, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், நடிகர் பார்த்திபன், தொழிலதிபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ‘ரெயின்ட் ராப்ஸ்’ வாழ்நாள் சாதனையாளர் விருது கர்நாடக மாநிலம் ஹென்னாலி கிராமத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான துளசி கவுடாவுக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், சிறந்த கலை மற்றும் ஆளுமைக்கான விருது புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமுவுக்கும், சிறப்பு அங்கீகார விருது இந்தியாவின் முதல் கப்பல் பைலட் தமிழகத்தை சேர்ந்த ரேஷ்மா நிலோபருக்கும், சிறந்த நடிகைக்கான விருது மீனாவுக்கும்,
சிறந்த வளர்ந்துவரும் நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோசுக்கும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது இளம் சதுரங்க விளையாட்டு வீராங்கனை ரிந்தியாவுக்கும்,
நம்பிக்கை விருது சென்னை ஐகோர்ட்டின் முதல் திருநங்கை வக்கீல் சத்யஸ்ரீ ஷர்மிளாவுக்கும், சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது மதுரை மாவட்டத்தை சேர்ந்த உமாமகேஸ்வரிக்கும், வீரத்துக்கான விருது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் யோகதர்ஷிணிக்கும் கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கருணைக்கான விருது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அனுரத்னாவுக்கும், இளம் விஞ்ஞானி விருது மாஷா நஷீமுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த தொழில் முனைவோருக்கான விருது மது சரணுக்கும், இளம் சாதனையாளருக்கான விருது கோவையை சேர்ந்த யோகா வைஷ்ணவிக்கும் வழங்கப்பட்டது.
இதுதவிர கர்நாடக இசை கலைஞரும், வாய்ப்பாட்டு பாடகருமான ‘பத்மஸ்ரீ' விருது பெற்ற முதல் பெண் பார்வை மாற்றுத்திறனாளி காயத்ரி சங்கரன், கொரோனா காலத்தில் ஆட்டோவில் ஆக்சிஜன் சாதனம் பொருத்தி 800-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றிய சீதாதேவி, தமிழகத்தின் முதல் கனரக வாகன சேவை பொறிமுறையாளர் கண்மணி உள்ளிட்டோருக்கும் சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story