போக்குவரத்து போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை - பெண் சப்-இன்ஸ்பெக்டரே காரணம் என நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ


போக்குவரத்து போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை - பெண் சப்-இன்ஸ்பெக்டரே காரணம் என நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ
x
தினத்தந்தி 6 March 2022 8:41 AM IST (Updated: 6 March 2022 8:41 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது சாவுக்கு பெண் சப்-இன்ஸ்பெக்டரே காரணம் என நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் வீடியோ வௌியிட்டு விட்டு தூக்கில் தொங்கினார்.

திரு.வி.க.நகர்,

சென்னை பாடி டி.வி.எஸ். நகர், 5-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41). இவர், திருவல்லிக்கேணியில் போக்குவரத்து போலீஸ் ஏட்டாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி, கணவரை பிரிந்து தனது குழந்தைகளுடன் அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வருகிறார். இதனால் கடந்த 4 மாதங்களாக கிருஷ்ணகுமார், பாடியில் உள்ள இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

கடந்த 3-ந் தேதி முகப்பேரில் வசிக்கும் ராஜமங்கலம் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும், ஏட்டு கிருஷ்ணகுமாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி நொளம்பூர் போலீசார் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு கிருஷ்ணகுமார் இருவரையும் அழைத்து விசாரித்து அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் கிருஷ்ணகுமார், தனது சாவுக்கு ராஜமங்கலம் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர்தான் காரணம் என பேசிய வீடியோவை தனது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பினார். மேலும் சமூகவலைதளங்களிலும் அந்த வீடியோவை வெளியிட்டார்.இதற்கிடையில் அந்த வீடியோவை பார்த்த அவரது உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து பாடியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு ஏட்டு கிருஷ்ணகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் அனுப்பி விட்டு, தூக்கில் தொங்கியது தெரிந்தது. இதுபற்றி கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story