மாண்புமிகு என்பதற்கு பதிலாக மீண்டும் ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்ற அடைமொழி வருமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
மாண்புமிகு என்பதற்கு பதிலாக மீண்டும் ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்ற அடைமொழி வருமா? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் நேற்று 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேயர் பொறுப்பு என்பது 12-ம் நூற்றாண்டிலேயே, இங்கிலாந்தில் இருந்து தொடங்கியது. அப்போது இருந்து, மேயரை ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று தான் அழைக்கப்பட்டு வந்தது. முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு மாண்புமிகு என்று அடைமொழி வார்த்தையும், ஜனாதிபதி, கவர்னருக்கு மேதகு என்ற அடைமொழி வார்த்தையும், மேயருக்கு ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்ற வார்த்தையும் உபயோகிக்கப்பட்டு வந்தது.
ஆயிரம் ஆண்டுகளாக மேயரை இந்த அடைமொழியில் தான் அழைத்து வந்தனர். ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அன்றைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவர்களுக்கு மேல் வேறு யாரும் இருக்க கூடாது என்பதால், இனி மேயருக்கு மாண்புமிகு என்ற வார்த்தையைதான் உபயோகிக்க வேண்டும் என்று கூறினார். ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்ற வார்த்தை உறுத்தலாக இருந்த காரணத்தால், அதை அரசாணை மூலம் மாண்புமிகு என மாற்றி உள்ளனர். இந்தநிலையில் மேயரை மீண்டும் ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என அழைப்பது குறித்து முதல்-அமைச்சர் பரீசிலிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story