முதல்-அமைச்சரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள் - தி.மு.க.வினருக்கு கி.வீரமணி வேண்டுகோள்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளலாமா, முதல்-அமைச்சரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள் என்று தி.மு.க.வினருக்கு கி.வீரமணி அறிவுரை வழங்கியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
உள்ளாட்சியில் 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 489 பேரூராட்சிகளில் 80 சதவீதத்துக்கு மேல் வெற்றியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘பிறந்த நாள் பரிசாக’ மக்கள் குறிப்பாக வாக்காளர்கள் அளித்து மகிழும் வேளையில், உள்ளாட்சி பொறுப்புகளுக்கான தேர்தலில் சிற்சில ஊர்களில் தி.மு.க.வின் கட்டுப்பாடு மீறிய சிலரின் செயல்கள், பெரும் பூரிப்புடனும், உற்சாகத்துடன் பருவம் பாராமல், மானம் பாராமல் தொண்டாற்றிவரும் அவருக்கு மன உளைச்சலை தரும் வகையில் அமைந்துள்ளது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.
தந்தை பெரியார் தி.மு.க.வுக்கு கூறிய அறிவுரைதான் நினைவுக்கு வருகிறது. காலத்தை வென்றது அவரது மூதுரையான கருத்துரை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற மூன்று சொற்களில், மிகவும் முக்கியமானது கட்டுப்பாடு. தி.மு.க.வினர் ஒரு போதும் கட்டுப்பாட்டை மீறவே கூடாது. அப்படி நடந்தால், அவர்களை யாராலும் வெல்ல முடியாது. தி.மு.க. கெட்டியான பூட்டு, அதற்கு யாரும் கள்ளச்சாவி போட்டுவிடக்கூடாது என்று முன்பு கருணாநிதி பொறுப்பேற்ற நிலையில் கூறியது காலத்தை வென்ற அறிவுரைகள் ஆகும்.
கூட்டணி கட்சிகளின் முன் நான் கூனிக்குறுகி நிற்கிறேன் என்று தி.மு.க.வின் தலைவர் கூறியுள்ளது வார்த்தைகளால் வடித்தெடுத்து முடிக்க முடியாத வருத்தத்தின் வெளிப்பாடாக இருப்பதை கண்டு, தி.மு.க.வுக்கு வாளும், கேடயமாக உள்ள தாய்க்கழகம், தி.மு.க.வில் சிலரின் கட்டுப்பாடு மீறிய செயலால் வேதனைப்படுகிறோம்.
சிறுபிள்ளைத்தனமாக சிற்சிலவிடங்களில் தோழமை கூட்டணிக்கு ஒதுக்கிய பொறுப்புகளுக்கு, குறுக்கு வழி போட்டியை ஏற்படுத்தி, வெற்றியை இப்படி நேர்வழியில் இல்லாமல் பறித்து, தி.மு.க.விற்கும், அதன் ஒப்பற்ற தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தலாமா?. உடனடியாக தி.மு.க. தலைவர் விடுத்துள்ள மின்னல் வேக அறிக்கைப்படியும், அறிவுரைப்படியும் உடனடியாக செயல்படவேண்டியது அவசரம், அவசியம் என்பது உரிமை கொண்ட தாய்க்கழகத்தின் கருத்தும், அன்பு வேண்டுகோளும் ஆகும்.
வெற்றி பெற்ற பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வருத்தம் தெரிவித்து, தி.மு.க. தலைவரை வந்து பார்த்து, “கழுவாய்த்’’ தேட, அவர் பெருந்தன்மையுடன் அளித்துள்ள அரிய வாய்ப்பை உடனடியாக பற்றிக்கொள்ளுங்கள். தலைவரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள். உங்களையும் திருத்திக் கொள்ளுங்கள் என்று தாய்க்கழகம் என்ற உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story