சாத்தான்குளம் கொலை வழக்கில் செவிலியர் சாட்சியம்: விசாரணை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் அரசு மருத்துவமனை செவிலியர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.
மதுரை,
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் போலீசார் அழைத்து சென்றனர். சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதில் இருவரும் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கில் சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில் பணியாற்றிய அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இரட்டைக்கொலை வழக்கு நீதிபதி பத்மநாபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சியாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி செவிலியர் புகழ்வாசுகி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம், கைதான போலீசார் தரப்பு வக்கீல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு விசாரணை வருகிற 10-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலிய உதவியாளர் அருணாசல பெருமாள் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.
நேற்று புகழ்வாசுகி சாட்சியம் அளித்தபோது, “சம்பவத்தின் போது, போலீஸ் நிலையத்தில் இருந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களின் உடலில் படுகாயங்கள் இருந்தன” என்று கூறியுள்ளார்.
இதுவரை சாட்சியம் அளித்தவர்கள் தந்தை-மகனின் உடல்களில் இடுப்பு பகுதியில் தான் பெரும் காயங்கள் இருந்ததாக கூறியதாகவும், இவர் அளித்த இந்த தகவல், மற்றவர்களின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபட்டதாக கருதப்படுவதாகவும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல இந்த வழக்கில் கைதாகியுள்ள ஏட்டு முருகன் சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவில், தந்தை-மகன் தாக்கப்பட்ட சம்பவத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கும் தொடர்பு உள்ளது. அவரையும் விசாரணை நடத்தும்படி கூறியிருந்தார்.
இந்த மனு குறித்து பதில் அளிக்கும்படி சி.பி.ஐ.க்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நேற்றைய விசாரணையின்போது சி.பி.ஐ. போலீசார் பதில் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. அடுத்தகட்ட விசாரணையின்போது தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story