30 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்யும் ஜக்கி வாசுதேவ் - கோவையில் இருந்து புறப்பட்டார்


30 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்யும் ஜக்கி வாசுதேவ் - கோவையில் இருந்து புறப்பட்டார்
x
தினத்தந்தி 6 March 2022 12:04 PM IST (Updated: 6 March 2022 12:04 PM IST)
t-max-icont-min-icon

மண்வள பாதுகாப்பை வலியுறுத்தி 30 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணத்தை ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ள உள்ளார்.

சென்னை,

உலகளவில் மண்வள பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் 30 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் பயணிக்க உள்ளார். இதையொட்டி, ஏராளமான ஈஷா தன்னார்வலர்கள் நேற்று காலை கோவை ஆதியோகி முன்பு திரண்டிருந்தனர்.

மார்ச் 21-ந் தேதி லண்டனில் இருந்து தனது விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பயணத்தை ஜக்கி வாசுதேவ் தொடங்குகிறார். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

இதற்கிடையே, ஐவெரி கோஸ்ட் நாட்டில் ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பு நடத்தும் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில் அவர் உரை நிகழ்த்த உள்ளார். இதில் 170-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், டாவோஸில் நடக்கும் உலக பொருளாதார மாநாட்டிலும் ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டு உரை ஆற்ற உள்ளார்.

அமெரிக்காவுக்கு செல்லும் அவர் அங்குள்ள பல்வேறு சர்வதேச ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க இருக்கிறார். இதை தொடர்ந்து கரீபியன் தீவுகளுக்கு பயணிக்கும் அவர் 9 முதல் 11 நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார். கோவையில் ஜக்கி வாசுதேவ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகளவில் மண் வளத்தை பாதுகாப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளோம். உலகம் முழுவதும் உள்ள பல விஞ்ஞானிகளும், ஐ.நா.அமைப்புகளும் மண் வளம் இழப்பதால் ஏற்பட போகும் பேராபத்து குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகிறார்கள்.

2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியாக அதிகரித்துவிடும் என்றும், உணவு உற்பத்தி தற்போது இருப்பதை விட 40 சதவீதம் குறைந்துவிடும் எனவும் கூறுகின்றனர். இதனால், 192 நாடுகளில் மண் வள பாதுகாப்பு குறித்த கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்க நாங்கள் வலியுறுத்த உள்ளோம்.

இதற்காக, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடனும் பேசி வருகிறோம். 730 அரசியல் கட்சிகளுக்கு தங்களின் தேர்தல் அறிக்கைகளில் மண் வள பாதுகாப்பை முக்கிய அம்சமாக சேர்க்க வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறோம். நாங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் அங்குள்ள விவசாய முறைகள் மற்றும் மண்ணின் தன்மையை அடிப்படையாக கொண்டு மண்வள பாதுகாப்பு கொள்கைகளை தயாரித்து இருக்கிறோம்.

இந்த பயணத்தில் பல சவால்கள் இருக்கின்றன. ஐரோப்பாவில் பனி பொழிய தொடங்கி உள்ளது. நான் அரேபிய நாடுகளில் மே மாதம் பயணிக்கும் போது வெயில் உச்சத்தை தொட்டு இருக்கும். இந்தியாவிற்குள் நுழையும் போது பருவமழை ஆரம்பிக்கும். இதுதவிர, தற்போது போர் வேறு நடக்கிறது. போர் நடக்கும் அந்த நாடுகளில் எல்லைகளை ஒட்டிய பகுதிகள் வழியாக பயணிக்க வேண்டிய தேவையும் ஏற்படும். மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முக்கியமான பணியில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கோவையில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டர்.

Next Story