உக்ரைனில் தவித்த 12 மாணவர்கள் கோவை வந்தனர் - பெற்றோர் வரவேற்பு
உக்ரைனில் தவித்த 12 மாணவர்கள் கோவை வந்தனர். அவர்களை பெற்றோர் உற்சாகமாக வரவேற்றனர்.
கோவை,
உக்ரைன் மீது போர் தொடுத்து ரஷியா குண்டு மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இந்தியர்கள் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து ரெயில் மூலம் ஹங்கேரி வந்து விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் நேற்று டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் வந்தடைந்தனர்.
இதில், ஈரோடு மாவட்டம் கொடுமுடி ராசபாளையத்தை சேர்ந்த திவ்ய வர்தன், திருப்பூர் மாவட்டம் மங்கலம் ரோட்டை சேர்ந்த தினேஷ், கோவை சிங்காநல்லூரை சேர்ந்த அருள்குமரன் மற்றும் ஜெரோம், ஜெயசூர்யா, கனிஷ்கா, விந்தியா, விஷ்வேஷ், சினேகா, ஸ்ரீ ஹரி, கவின்,சூலூரை சேர்ந்த ஸ்ரீரஞ்சனி ஆகிய 12 மாணவ- மாணவிகள் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க ஆரத்தழுவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இது குறித்து மாணவ- மாணவிகள் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகளின் உதவியால் உக்ரைனில் இருந்து பத்திரமாக வந்துள்ளோம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் பெரிய குண்டு வெடித்தது. அந்த தீ பிழம்பை நாங்கள் பார்த்தோம். மேலும் அங்குள்ள மிகப்பெரிய 2 ஆட்டோமிக் மின் உற்பத்தி நிலையத்தில் மின் கசிவு ஏற்பட்டது. இதனால் நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருந்தோம்.
எங்களை கல்லூரி நிர்வாகம் ரெயிலில் அனுப்பி வைத்தது. 28 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் செய்து உக்ரைன் மேற்கு எல்லையை கடந்து கடந்த 1-ந் தேதி ஹங்கேரி வந்தடைந்தோம். இந்திய தூதரகத் தின் உதவியால் மீண்டும் ரெயிலில் ஹங்கேரியின் புடாபெஸ்ட் என்ற இடத்துக்கு வந்து ஒரு நாள் விமானத்திற்காக காத்திருந்து குவைத் வந்து அங்கிருந்து மும்பை வந்தடைந்தோம். மும்பையில் இருந்து ஐதராபாத் வழியாக கோவை வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story