ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி..!


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி..!
x
தினத்தந்தி 6 March 2022 8:35 PM IST (Updated: 6 March 2022 8:35 PM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் வேலை வாங்கிதருவதாக கூறி ரூ.88 லட்சம் மோசடி செய்த கல்லூரி போராசிரியை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

தனியார் சட்டக்கல்லூரி ஒன்றில் கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் சாந்தி (45). இவர் மீது சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த திவ்யா உள்பட 17 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில் ரெயில்வே மற்றும் இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.88 லட்சத்தை சுருட்டி விட்டதாகவும், உரிய சட்ட நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும்படியும், தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் முருகேசன் இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பேராசிரியை சாந்தி மோசடியில் ஈடுபட்டது உண்மை என்று தெரியவந்தது.

இதன்பேரில் சாந்தி கைது செய்யப்பட்டார். மோசடியில் சாந்திக்கு துணை புரிந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த பக்தவச்சலம் (43) என்பவரும் கைதானார். மோசடி பணத்தில் சாந்தி தங்க நகைகளை வாங்கியது தெரியவந்தது. அந்த நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story