மறுபிறவி எடுத்து வந்து உள்ளோம் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் உக்ரைனில் இருந்து திரும்பிய கறம்பக்குடி மாணவர் பேட்டி
மறுபிறவி எடுத்து வந்து உள்ளோம். மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும் என்று உக்ரைனில் இருந்து திரும்பிய கறம்பக்குடி மாணவர் தெரிவித்தார்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி மாணவர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒடப்பவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். விவசாயி. இவரது மனைவி ஆனந்தி. இவர்களுடைய மகன் அஜித்ராஜ் (வயது 21). இவர் உக்ரைனில் உள்ள வினிசியா பிரிக்கோ மெமோரியல் மெடிக்கல் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் அங்கு போர் காரணமாக உக்ரைனில் தவித்து பின்னர் ருமேனியா வந்தடைந்த அவரை மத்திய அரசு மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தது. டெல்லி வந்தடைந்த அவர் தமிழக அரசின் ஏற்பாட்டில் நேற்று மாலை சொந்த ஊருக்கு திரும்பினார். அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். பின்னர் அஜித்ராஜ் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-
மரண பயத்தில் தவித்தோம்
ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து மிகவும் அச்சத்துடன் இருந்தோம். அங்கு மிகவும் புகழ்பெற்ற நூற்றாண்டு பழமை மிக்க கல்லூரியில் படித்ததால் பாதுகாப்பாக உணர்ந்தோம். இருப்பினும் விமானங்கள் பறக்கும் சத்தமும், அடிக்கடி அபாய சங்கு ஒலியும் பெரும் பதற்றத்தை தந்தது. இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்தோம். உணவு கிடைப்பதும் பெரும் சிரமமாக இருந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு எங்கள் பல்கலைக்கழகத்தின் சார்பாக வாகனம் ஏற்பாடு செய்து ருமேனியா சென்றடைந்தோம். அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் நேற்று முன்தினம் இந்திய விமானத்தின் மூலம் டெல்லி வந்தடைந்தோம். அங்கிருந்து தமிழக அரசின் ஏற்பாட்டின் பேரில் சென்னை வந்து பின் சொந்த ஊர் திரும்பினேன். எங்களை பத்திரமாக மீட்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. கர்நாடகாவை சேர்ந்த மாணவர் உணவு வாங்க சென்றபோது குண்டு வீச்சில் கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மரண பயத்தில் தவித்தோம். தற்போது மறுபிறவி எடுத்து வந்ததுபோல் உள்ளது.
அரசு உதவி செய்ய வேண்டும்
ஏழ்மையான சூழலில் மருத்துவ கனவை நிறைவேற்ற உக்ரைன் சென்ற என்னை போன்ற மாணவர்கள் மருத்துவ படிப்பை தொடர அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் அங்கு சிக்கி உள்ள அனைத்து மாணவர்களையும் மீட்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
உக்ரைனில் இருந்து சொந்த கிராமம் திரும்பிய மாணவரை அந்த கிராம மக்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் அங்குள்ள போர் சூழல் குறித்தும் கேட்டறிந்தனர்.
Related Tags :
Next Story