சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை பிரதமர் மோடி சூட்ட யார் காரணம்?


சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை பிரதமர் மோடி சூட்ட யார் காரணம்?
x
தினத்தந்தி 7 March 2022 12:22 AM IST (Updated: 7 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை பிரதமர் நரேந்திரமோடி சூட்ட யார் காரணம் என்பது குறித்து சைதை துரைசாமி தகவல் வெளியிட்டுள்ளார்.

திண்டுக்கல்,

அனைத்துலக மனிதநேய மாணிக்கம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அறக்கட்டளை சார்பில் எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்தநாள் விழா திண்டுக்கலில் நேற்று நடைபெற்றது.

விழாவில் உலக எம்.ஜி.ஆர். பேரவையின் தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேய மையத்தின் தலைவருமான சைதை துரைசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் அவர், எம்.ஜி.ஆருடன் தான் பழகிய பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

நான் எடுத்த முயற்சி

அப்போது சைதை துரைசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின்போது அவரது புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வண்ணம் அவரது பெயரை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு சூட்ட வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் ரசிகர்கள், பக்தர்களின் கோரிக்கையாக இருந்தது. இதுதொடர்பாக நான் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினேன். ஆனால் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் பெயரை சூட்ட முடியும் என்று கூறிவிட்டனர்

உடனே நான் அப்போதைய முதல்-அமைச்சரான அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதனை தெரிவித்தேன். அதன்பின்னர்தான் சட்டமன்றத்தில் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமருக்கு நன்றி

இந்தியாவில் எந்த ரெயில் நிலையத்துக்கும் அரசியல் கட்சி தலைவர் பெயரை சூட்டிய வரலாறு கிடையாது. நான் எடுத்த பெரும் முயற்சியால்தான், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டது.

இதன் மூலம் உலககெங்கும் வசிக்கிற மக்கள் எம்.ஜி.ஆரை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், தினமும் ஒரு லட்சம் பேர் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்கின்ற வகையிலும் அழியா புகழை ஏற்படுத்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. உலகின் கடைசி மனிதன் இருக்கும் வரையில் எம்.ஜி.ஆர். பெயர் நிலைத்து இருக்கும்.

ஒரே மேயர்

எனது வேண்டுகோளை ஏற்று நிறைவேற்றப்பட்ட அரசு தீர்மானத்தின் அடிப்படையில், சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டிய பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ புத்தகத்தை சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

மக்கள் நேரடியாக வாக்களித்து 5.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரே மேயராக நான் இருந்தேன். இந்த வரலாற்றை எம்.ஜி.ஆர். இறைவனாக இருந்து உருவாக்கினார். ஊழலற்ற, நேர்மையான மேயராக வாழ்ந்து வெளியே வந்திருக்கிறேன். நான் அரசியல்வாதி அல்ல, மற்றவர்களுக்காக வாழும் ஒரு சேவையாளன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சைதை துரைசாமிக்கு கர்நாடக மாநிலம் மைசூரு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் எம்.ஜி.ஆர். தலைப்பாகை, மாலை அணிவித்து கவுரவித்தனர்.

Next Story