ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி 80 பேர் காயம்


ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் முட்டி 80 பேர் காயம்
x
தினத்தந்தி 7 March 2022 2:21 AM IST (Updated: 7 March 2022 2:21 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 80-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை அருகே உள்ள டி.புதூர் கிராமத்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 216 காளைகள் அழைத்து வரப்பட்டன.

இந்த காளைகளை பிடிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

மைதானத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. இந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், வீரர்களுக்கும் கிராமத்தினர் சார்பில் சில்வர் பாத்திரம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.

80 பேர் காயம்

மேலும் போட்டியின்போது காளைகள் முட்டியதில் 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 6 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியை காண சிவகங்கை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

திண்டுக்கல், திருச்சி

இதேபோல் திண்டுக்கல் அருகே நல்லமநாயக்கன்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் 45 பேர் காயம் அடைந்தனர்.

திருச்சி கல்லக்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 46 பேர் காயமடைந்தனர். அவர்களில் 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story