கவனிக்க ஆள் இல்லாததால் விபரீதம்; தந்தை மகன் தூக்கிட்டு தற்கொலை...!


கவனிக்க ஆள் இல்லாததால் விபரீதம்; தந்தை மகன் தூக்கிட்டு தற்கொலை...!
x
தினத்தந்தி 7 March 2022 11:16 AM IST (Updated: 7 March 2022 11:16 AM IST)
t-max-icont-min-icon

கவனிக்க ஆள் இல்லாததால் கடிதம் எழுதி வைத்து தந்தை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போரூர்,

சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 77) இவருக்கு ஞானம்(53) என்ற மகன் உள்ளார். இன்று காலையில் கங்காதரன் வீட்டின் கதவு வெகு நேரமாகியும் திறக்காமல் இருந்து உள்ளது. 

இதனால் சந்தேகமடைந்த கங்காதரன் மகள் சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து உள்ளார். அங்கு தந்தை மற்றும் சகோதரன் ஞானம் ஆகிய இருவரும் தூக்கில் தனித்தனியாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்குவந்த கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தரப்பில் கூறுகையில்,

கங்காதரன் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து கங்காதரன் இருதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதேபோல் சிறுவயது முதலே சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஞானம் தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய ஞானத்தின் கால் முறிந்து உள்ளது. 

தந்தை மகன்  இருவரையும் கவனித்து கொள்ள யாரும் இல்லை அருகில் வசித்து வரும் கங்காதரனின் மகள் சுமதி தன்னால் முடிந்த உதவியை செய்து வந்துள்ளார். 

இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன வேதனையில் இருந்து வந்த கங்காதரன் மற்றும் ஞானம், எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறோம்" என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

Next Story