சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர்.
அவினாசி தாலுகா புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி தத்தனூர் ஊராட்சி, புலிப்பார் ஊராட்சி பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது
தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஆகிய 3 ஊராட்சி பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகிறோம். ஏற்கனவே பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டையால் அப்பகுதி நிலத்தடி நீர் மாசுபட்டதால் மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தத்தனூர் பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு நிலத்தை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நிலத்தடி நீரும் மாசுபடும். எங்கள் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வேண்டாம் என்று பலமுறை அரசிடம் தெரிவித்துள்ளோம். தத்தனூர் சிப்காட்டை ரத்து செய்வதாக அரசு அறிவித்ததால் போராட்டத்தை நாங்கள் கைவிட்டோம்.
சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிர்ப்பு
அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட்டு எங்கள் பகுதியில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வர உள்ளது. விவசாயம் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த நிலையில் சிப்காட் தொடர்பாக வரைபடம் தயாரிப்பதற்கு மறு ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தனர். சுமார் 1,500 ஏக்கர் கொண்ட பரப்பளவு நிலத்தை ஆய்வு செய்கிறார்கள். அந்த நிலத்துக்குள் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 5வது நீரேற்றும் நிலையம் உள்ளது. இதனால் அந்த திட்டம் செயல்பாட்டுக்கு வருமா என்ற சந்தேகம் உள்ளது. சிப்காட் குறித்து அவினாசி தாசில்தாரிடம் கேட்டபோது எந்தவித ஆணையும் வரவில்லை என்று கூறினார். எங்கள் பகுதியில் சிப்காட் அமைந்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே எங்கள் பகுதியில் சிப்காட் திட்டத்தை ரத்து செய்து சிப்காட் அமையாது என்ற அரசாணை வெளியிட்டு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
மாணவிகள் கண்ணீர் மனு
சாமளாபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் குடியிருக்கும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகளோடும், பள்ளி மாணவ மாணவிகளோடும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர். அந்த மனுவில், நீர் நிலை புறம்போக்கில் நாங்கள் குடியிருக்கும் வீடுகளை இடிப்பதாக பொதுப்பணித்துறை சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். வீடுகளை இடித்து விட்டால் நாங்கள் எங்கு தங்குவது, பள்ளியில் தேர்வு எழுதுவது என கவலையாக உள்ளது. அதனால் எங்கள் வீடுகளை இடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story