மதுரை சிறுமி கொலை: போராட்டம் நடத்திய நிலையில் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!


மதுரை சிறுமி கொலை: போராட்டம் நடத்திய நிலையில் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!
x
தினத்தந்தி 7 March 2022 8:28 PM IST (Updated: 8 March 2022 12:55 PM IST)
t-max-icont-min-icon

கடத்தி கொலை செய்யப்பட்ட மதுரை மேலூர் சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை, 

மதுரை மாவட்டம், மேலூர் தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டுச் சென்ற நிலையில் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த நாகூர்ஹனிபா காதலித்து வந்ததும், அவர் நண்பர்கள் உதவியுடன் சிறுமியைக் கடத்தி சென்றதும் தெரியவந்தது. 

சிறுமி கொலை

இந்நிலையில் சிறுமியைத் தேடி வருவதை அறிந்தும், அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். அதன்படி எலி மருந்தைச் சிறுமியிடம் கொடுக்க அவர் சாப்பிட்டுள்ளார். ஆனால் நாகூர்ஹனிபா அதனை சாப்பிடவில்லை. இதற்கிடையில் நாகூர்ஹனிபாவின் தாயார் மயங்கிய நிலையில் சிறுமியை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் சிறுமியைக் கடத்தி கொலை செய்தல் மற்றும் போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா, அவரது நண்பர்கள் பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், சாகுல்ஹமீது மற்றும் நாகூர்ஹனிபாவின் தாயார் மதினா, தந்தை சுல்தான் அலாவுதீன், சகோதரர் ராஜாமுகமது, ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரைத் தேடி வருகின்றனர்.

போராட்டம்

இன்று காலை சிறுமியின் உடல் கோட்டாட்சியர் முன்பு டாக்டர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதனால் மருத்துவமனை பகுதியில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் போக்சோ வழக்கிற்கான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். சிறுமி கடத்தலுக்கு உதவிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த கோரிக்கை அரசு ஏற்கும் வரையில் சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. 

உடல் ஒப்படைப்பு

அதைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

பின்னர்  சிறுமியின் உடலானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறுமியின் உடலானது ஆம்புலன்ஸ் மூலமாக போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story