திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
புதுக்கோட்டை:
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வருகிறார். விழாவில் 9-ம் நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி மாவட்டத்திற்கு நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. அம்மனை தரிசனம் செய்ய மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் நேற்று காலை கோவிலில் குவிந்தனர். நேரம் செல்ல... செல்ல... பக்தர்கள் சாரை, சாரையாக வந்தனர். பகலில் நேற்று மழை பெய்த நிலையில் குடையை பிடித்தப்படியும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
சக்தி வாய்ந்த அம்மனாக திகமும் திருவப்பூர் முத்துமாரியம்மனை மனமுருகி பக்தர்கள் பலர் வேண்டினர். மேலும் பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தியும், அலகு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் சிலர் பூக்குழி இறங்கினர். கரும்புகளில் தொட்டில் கட்டி சில பக்தர்கள் சுமந்து வந்தனர். மேலும் சில பக்தர்கள் வேடம் அணிந்து வந்தும் அம்மனை தரிசனம் செய்தனர். இவ்வாறு பக்தர்கள் கோவிலுக்கு வந்த போது மேள தாளம் முழங்கவும், டிரம்ஸ் இசைத்தப்படியும் பாதயாத்திரையாக வந்தனர். இந்த இசையின் பின்னணியில் இளைஞர்கள் பலர் உற்சாகமாக நடனமாடியபடி வந்தனர். கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.
தேரோட்டம்
விழாவில் தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. காட்டுமாரியம்மன் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். தேரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கவிதாராமு, முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மண்டகபடிதாரர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்து ஆடிய படி நான்கு வீதிகளில் வலம் வந்தது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்ததால் எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. பக்தர்கள் அம்மனை பய, பக்தியுடன் தரிசனம் செய்தனர். தேர் நான்கு வீதிகளையும் சுற்றிய பின் நிலையை வந்தடைந்தது.
போக்குவரத்து நெரிசல்
தேர்த்திருவிழாவையொட்டி ஆங்காங்கே அன்னதானம், நீர் மோர், சர்பத் உள்ளிட்டவைகளை தன்னார்வலர்களும், பொதுமக்கள் பலரும் வழங்கினர். திருவப்பூர் பகுதியே நேற்று விழாக்கோலம் பூண்டது. தேரோட்டம் வெகுவிமரிசையாக கோலாகலமாக நடந்தது. கலெக்டர் அலுவலக சாலை, திருவப்பூர் ரெயில்வே கேட் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் திணறினர். கோவிலில் விழா வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மறுநாள் (15-ந் தேதி) காப்பு களைதலுடன் விழா நிறைவடைகிறது. தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மழையிலும் குவிந்த பக்தர்கள்
தேர்த்திருவிழாவில் நேற்று காலையில் மழை பெய்த நிலையில் மதியம் சற்று நின்றது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குவிந்தனர். இந்த நிலையில் தேரைவடம்பிடித்து இழுக்கும் போது மீண்டும் தூறல் மழை பெய்ய தொடங்கியது. பக்தர்கள் பலர் குடையை பிடித்தப்படி நின்றனர். தேர் வடம் பிடித்து இழுத்த பின் சிறிது நேரத்தில் தூறல் மழை நின்றது. தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது பகதர்கள் அரோகரா...அரோகரா.... மகமாயி என பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர். தேரோட்டத்தை பக்தர்கள் சிலர், வீட்டின் மாடிகளில் ஏறி நின்று பார்த்தனர்.
Related Tags :
Next Story