மு.க.ஸ்டாலினுக்கு எதிரான குற்ற வழக்கு ஏன் திரும்ப பெறப்பட்டது? ஐகோர்ட்டில் அரசு தரப்பு விளக்கம்


மு.க.ஸ்டாலினுக்கு எதிரான குற்ற வழக்கு ஏன் திரும்ப பெறப்பட்டது? ஐகோர்ட்டில் அரசு தரப்பு விளக்கம்
x
தினத்தந்தி 8 March 2022 3:05 AM IST (Updated: 8 March 2022 3:05 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான குற்ற வழக்கு ஏன் திரும்ப பெறப்பட்டது என்பதற்கு சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த 2018-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தின. அதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், சரத்குமார், கராத்தே தியாகராஜன், ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன் ஆகிய 7 தலைவர்கள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை சிறப்புகோர்ட்டில் தாக்கல் செய்ததால், இவ்வழக்கை திரும்பப்பெற அனுமதிக்கப்பட்டது.

சரிபார்ப்பு

இதுபோல அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறும்போது, அதற்கு அரசு கூறும் காரணம் சரிதானா, அந்த வழக்கை திரும்ப பெற அனுமதிக்கலாமா என்பதை அந்தந்த மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சரிபார்த்து உத்தரவிட வேண்டும் என்று கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 7 தலைவர்கள் மீதான வழக்கு திரும்பப்பெறப்பட்டது சரிதானா என்பதை உறுதி செய்ய இந்த வழக்கு ஆவணம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர், தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வரும் முதல் வழக்கு தமிழ்நாட்டில் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலன்

அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘வாபஸ் பெறப்பட்ட வழக்கு ஊழல் போன்ற தீவிர குற்றச்சாட்டு தொடர்புடைய வழக்கு இல்லை. பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தலைவர்கள் போராடியுள்ளனர். அதற்கு, முந்தைய ஆட்சிக்காலத்தில் இப்படி வழக்கு போடப்பட்டுள்ளது.

மக்களுக்காக நடந்த போராட்டம் என்பதாலும், அதற்காக போடப்பட்ட வழக்கு என்பதாலும், அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்றி இதை திரும்பப்பெற்றுள்ளோம். எனவே இந்த வழக்கை திரும்பப்பெற அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.

Next Story