உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பேசிய முதல்-அமைச்சர்


உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பேசிய முதல்-அமைச்சர்
x
தினத்தந்தி 8 March 2022 4:35 AM IST (Updated: 8 March 2022 4:35 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார். அப்போது, தமிழக அரசின் சிறப்பான ஏற்பாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நெல்லை,

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். தூத்துக்குடியில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த அவர், கடந்த மழையின்போது வெள்ளம் பாதித்த பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் சென்றபோது, கோவில்பட்டியில், ‘தினத்தந்தி' வாங்கி படித்தார். அதில், உக்ரைனில் இருந்து நெல்லை திரும்பிய மாணவ-மாணவிகள், சொந்த ஊர் திரும்ப சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக தனக்கு நன்றி தெரிவித்த செய்தியை பார்த்தார்.

மாணவ-மாணவிகளுடன் சந்திப்பு

உடனே, நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவை போன் மூலம் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட மாணவ-மாணவிகளை நெல்லை வரும்போது சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி, நேற்று மாலை மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரத்தில் உள்ள மாணவி நிவேதிதா வீட்டில் வைத்து, உக்ரைனில் இருந்து திரும்பிய ஏனைய மாணவிகள் திவ்யபாரதி, ஹரிணி, மாணவன் நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

அப்போது, ஒவ்வொருவரின் பெயர் மற்றும் ஊர் விவரங்களை தனித்தனியாக கேட்டு தெரிந்து கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், உக்ரைனில் நடந்த போருக்கு இடையே தமிழக மாணவ-மாணவிகள் எல்லையை பாதுகாப்பாக கடந்தது குறித்தும், உணவு தேவையை எவ்வாறு சமாளித்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, அந்த மாணவ-மாணவிகள், 2 நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், உணவு வழங்கப்படும் இடத்தை வாட்ஸ்-அப் மூலம் தெரிந்து சென்றதாகவும் கூறினார்கள். மேலும், எல்லையை கடந்த பிறகு தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடு தாங்கள் நாடு திரும்ப வெகுவாக உதவியது என்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றியும் தெரிவித்தனர்.

சிறப்பான ஏற்பாடு

அப்போது மாணவர் நவநீத ஸ்ரீராம், ‘‘எங்களுடன் மும்பை மாணவர்களும் வந்தனர். அவர்கள் தமிழக அரசுதான் மாணவர்களை மீட்பதில் சிறப்பான ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டு தெரிவித்தனர். தமிழக அரசை போல் எந்த மாநில அரசும் மீட்பு நடவடிக்கைகளை சிறப்பாக செய்யவில்லை’’ என்றார்.

தொடர்ந்து, அந்த மாணவ-மாணவிகளிடம் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘நாங்கள் தமி ழகத்திலேயே படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். அது தொடர்பாக, தான் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அருகில் இருந்த அதிகாரிகளிடமும் அது குறித்த விவரங்களை கேட்டு உடனே தெரிவித்தார்.

பின்னர், மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோரையும் அழைத்து, தன் அருகே நிற்க வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் விடைபெற்று கொண்டு மதுரை நோக்கி தனது பயணத்தை தொடர்ந்தார்.

Next Story