சென்னை மாநகர பஸ்களில் கட்டணமின்றி தினமும் 8 லட்சம் பெண்கள் பயணம்...!


சென்னை மாநகர பஸ்களில் கட்டணமின்றி  தினமும்  8 லட்சம் பெண்கள் பயணம்...!
x
தினத்தந்தி 8 March 2022 1:03 PM IST (Updated: 8 March 2022 1:03 PM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மாநகர பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி  பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

இந்த திட்டத்துக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. சென்னை மாநகர பஸ்களில் இத்திட்டம் தொடங்கியபோது 4, 5 லட்சம் பெண்கள் மட்டுமே பயணம் செய்தனர். ஆனால் தற்போது சராசரியாக 8 லட்சம் பேர் தினமும் பயணம் செய்கிறார்கள்.

கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ள நிலையில் பெண்கள் அதிகளவு இந்த வசதியை பயன்படுத்துகிறார்கள். வார நாட்களில் 8.5 லட்சம் பெண்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 7 லட்சம் பேரும் பயணம் செய்கிறார்கள்.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம் சிறுதொழில் செய்யக்கூடிய பெண்கள் அதிகளவு பயணம் செய்கிறார்கள்.

1,250 சாதாரண பஸ்களில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்களில் அதிக நேரம் பெண்கள் காத்து நிற்காமல் பயணம் செய்ய முடிகிறது. பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தாலும் பெண்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவர் கையசைத்து பஸ்சை நிறுத்தக்கூறினாலும் நிறுத்தி அவரை ஏற்ற வேண்டும் என்றும், புகாருக்கு இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் என்றும், டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

இதுதவிர அவர்களுக்கு பெண் பயணிகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற பயிற்சியும் அளிக்கப்படுகிறது. 4 போக்குவரத்து கழக மையங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண்களிடம் கனிவாக பேச வேண்டும் என்றும் இந்த பயிற்சியின்போது வலியுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, ‘கொரோனாவுக்கு முந்தைய நிலை இன்னும் வரவில்லை. ஆனாலும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தற்போது 48 குளிர்சாதன வசதி பஸ்களும், 145 மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன. பெண் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கான கட்டணத்தை அரசு போக்குவரத்து கழகத்திற்கு அரசு கொடுப்பதால் இதனை கட்டணமின்றி பயணமாக கருதி பெண்களை தரக்குறைவாக நடத்தக்கூடாது என்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்றனர்.

Next Story