புதிதாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 நாளில் சம்பளம் முதல் அமைச்சர் ரங்கசாமி உறுதி
புதிதாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 நாளில் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி
புதிதாக பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு 2 நாளில் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
மகளிர் தினவிழா
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கம்பன் கலையரங்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை செயலாளர் உதயகுமார் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சாதனைபடைத்த மகளிருக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவுக்கு தலைமை தாங்கிய முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
குடும்பத்தை காக்கும் பெண்கள்
நாட்டில் குடும்பத்தை கட்டிக் காப்பது பெண்கள்தான். எனவே குடும்பத்தின் வளர்ச்சி என்பது பெண்களையே சாரும். தாயை பார்த்து அவர்களது குடும்பத்தை தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்றார்கள். சிவன் தனது உடலில் பாதியை சக்திக்கு தந்தார்.
அந்த காலத்திலும் வீரப்பெண்கள் இருந்தனர். பல்வேறு ராஜ்ஜியங்களையும் ஆண்டனர். அவ்வையார் என்ற பெண் புலவர் கூட அரசர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். பெண்கள் இப்போது அதிகாரத்திற்கும் வந்துள்ளனர். அதுபோல் புதுவை பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதுதான் எங்கள் எண்ணம்.
தொழில் தொடங்கினால் சலுகை
பெண் புத்தி பின்புத்தி என்பார்கள். அதாவது பின்னால் வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய புத்தி என்பதுதான் அதற்கு பொருள். கெட்டவர்களை அழிப்பது சக்திதான்.
உலக அளவில் தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளது. பெண் கல்வியை வலியுறுத்தியவர் பாரதிதாசன்.
பெண்களுக்கு முழுமையான கல்வி தற்போது கிடைத்து வருகிறது. பெண்களுக்கு உயரிய நிலையை தரவேண்டும் என்பதற்காக பெண் பெயரில் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவில் 50 சதவீதம் சலுகை வழங்கினோம். அதனால் இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துள்ளது. அதேபோல் பெண்கள் தொழில் தொடங்கினால் சலுகைகளும் வழங்குகிறோம். தொழிற்சாலைகளை கட்டிக்காத்து நடத்தும் பெருமை பெண்களுக்கு உள்ளது.
2 நாளில் சம்பளம்
மேலும் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டுவருவோம். நிதிநிலைக்கு ஏற்ப அவற்றை அறிவிப்போம். புதுவை மாநிலத்தில் எப்போதும் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு.
அங்கன்வாடி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதில் பல பிரச்சினைகள் எழுந்தது. மத்திய அரசும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இறுதியாக பல்நோக்கு ஊழியர்கள் என்ற பெயரில் இந்தியாவிலேயே முதன்முறையாக அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர்.
அதற்கேற்ப அவர்கள் மழை நிவாரணம், இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட பணிகளையும் செய்தனர். இப்போது பணிநிரந்தரம் செய்யப்பட்ட அங்கன்வாடி ஊழியர்களுக்கு அதற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அந்த சம்பளத்தை இன்னும் 2 நாட்களில் வழங்குவோம்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.
சபாநாயகர் செல்வம்
சபாநாயகர் செல்வம் பேசுகையில், நமது முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அமைச்சரவையில் பெண் ஒருவருக்கு இடம் அளித்துள்ளார். புதுவையில் ஆண்களைவிட பெண்கள்தான் அதிகமாக உள்ளனர். கல்வி, பொருளாதாரத்தில் பெண் சமுதாயம் முன்னேறி வருகிறது. தமிழ் தெரிந்த அதிகாரிகள் புதுவை மக்களுக்கு இப்போது உதவி வருகிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் சிங்கப்பூரைவிட சிறந்ததாக புதுச்சேரி மாறும் என்றார்.
தேனீ.ஜெயக்குமார்
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் பேசுகையில், சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பார்கள். வில்லியனூரில் ஒரு சிவன் கோவில் உள்ளது என்றால் அதை சுற்றிலும் அம்மன் கோவில்கள்தான் உள்ளன. பெண்களிடம் ஆளும் தன்மை உள்ளது. பள்ளிக்கூட தேர்வுகளில் அவர்கள்தான் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். பெண்களுக்கு மாடித்தோட்டம், தேனீ வளர்ப்புக்கு பயிற்சி அளித்து வருகிறோம். அதற்கு தேவையான நிதியையும் வழங்க உள்ளோம். நமது முதல்-அமைச்சர் ரங்கசாமி பெண்களுக்கு மரியாதை தந்து தனது அமைச்சரவையில் பெண் ஒருவருக்கு இடம் அளித்துள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., சட்டத்துறை செயலாளர் கார்த்திகேயன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனர் முத்துமீனா, துணை இயக்குனர் அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story