மகளிர் தினத்தையொட்டி ஒருநாள் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக மாறிய கல்லூரி மாணவி ஜீப்பில் வலம் வந்தார்
மகளிர் தினத்தையொட்டி புதுவையில் ஒரு நாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக கல்லூரி மாணவி ஜீப்பில் வலம் வந்து பணியாற்றினார்.
புதுச்சேரி
மகளிர் தினத்தையொட்டி புதுவையில் ஒரு நாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக கல்லூரி மாணவி ஜீப்பில் வலம் வந்து பணியாற்றினார்.
ஒருநாள் சப்-இன்ஸ்பெக்டர்
புதுவை முத்தியால்பேட்டை பொன்னம்பல முதலியார் வீதியை சேர்ந்தவர் வைத்தியநாதன். டிரைவர். இவரது மகள் நிவேதா. பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். என்.சி.சி.யில் இவர் விமானப்படை பிரிவில் கேடட் சார்ஜண்ட் ஆக உள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி மகளிரை சிறப்பு செய்ய கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா முடிவு செய்தார். இதன்படி முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவரை ஒரு நாள் மட்டும் சப்-இன்ஸ்பெக்டராக நியமிக்க உத்தரவிட்டார். இந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு நிவேதா தேர்வு செய்யப்பட்டார்.
சல்யூட் அடித்து வரவேற்பு
இதைத்தொடர்ந்து காலை 7 மணி அளவில் முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் மாணவி நிவேதா பொறுப்பேற்றுக் கொண்டார். மிடுக்காக காவல்நிலையத்துக்கு வந்த அவரை போலீசார் சல்யூட் அடித்து வரவேற்றனர். பதிலுக்கு நிவேதாவும் சல்யூட் அடித்தார்.
காலையில் 7 மணிக்கு சக போலீசாருக்கு வழங்க வேண்டிய பணிகளை நிவேதாவே ஒதுக்கினார். பின்னர் போலீஸ் ஜீப்பில் சென்று ரோந்து வந்தார். தான் படிக்கும் பாரதிதாசன் மகளிர் கல்லூரி பகுதிக்கு சென்று போலீசார் முறையாக ரோந்து வருகிறார்களா? என்று கேட்டறிந்தார். மேலும் காந்தி வீதியில் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தினார்.
காலை 7 மணிக்கு பணியை தொடங்கிய அவர் மாலை 6 மணிவரை போலீசாரின் பணியை கவனித்தார். மாலையில் போலீஸ் மரியாதையுடன் அவர் வீடு திரும்பினார்.
மாணவியின் அனுபவம்
ஒருநாள் போலீசாக பணியாற்றிய அனுபவம் குறித்து மாணவி நிவேதா கூறுகையில், ஒரு நாள் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்ற என்னை உயர் அதிகாரிகள் தேர்ந்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்றவர்களுக்கு கிடைக்காத வாய்ப்பு இது. பெரும் சிரமத்துக்கு இடையே போலீசார் நமக்காக பணியாற்றி வருகிறார்கள். வருங்காலத்தில் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக ஒருநாள் பணியாற்றிய மாணவி நிவேதாவுக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., போலீஸ் ஏ.டி.ஜி.பி. ஆனந்த்மோகன், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, ஜான், முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story