பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் இதுவரை 20% மட்டுமே நிறைவு - அதிகாரிகள் தகவல்


பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் இதுவரை 20% மட்டுமே நிறைவு - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 8 March 2022 11:58 PM IST (Updated: 8 March 2022 11:58 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1,295 கோடியில் நடக்கும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் 20 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.

மதுரை,

மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை நேரடியாக கொண்டுவதற்கு ரூ.1,295.76 கோடியில் புதிய குடிநீர் திட்டம் தொடங்கி நடக்கிறது. இதற்காக, முல்லைப்பெரியாறு அணை அருகே லோயர் கேம்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது. 

அங்கிருந்து எடுக்கப்படும் சுத்திக்கரிக்கப்படாத குடிநீர் தேனி மாவட்டம் பன்னைப்பட்டிக்கு கொண்டு வந்து அங்கு அமைக்கப்படும் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு மதுரைக்கு கொண்டு வரப்படுகிறது. 

இதற்காக பன்னைப்பட்டியில் பிரமாண்டமான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியும், மாநகராட்சி 100 வார்டுகளில் 37 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கும் பணியும் நடக்கிறது. இந்த திட்டம் ஆரம்பத்தில் 2021ம் ஆண்டிற்குள் முடிக்க ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கீடு, டெண்டர் விடுவதில் தாமதம் ஏற்பட்டதால் தாமதமாகவே திட்டம் தொடங்கப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் தற்போது வரை 20 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இந்த குடிநீர் திட்டம் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த திட்டம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நிறைவடைய வாய்ப்பு இல்லை. மொத்தமுள்ள 5 பகுதிகளில், 4 பகுதிகள் டெண்டர் விட்டு பணிகள் தொடங்கி நடக்கிறது. 5வது பகுதி வரும் ஏப்ரல் 2ம் தேதி டெண்டர் விடப்பட இருக்கிறது. அதனால், இந்தத் திட்டம் மிகுந்த காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கரோனாவால் 6 மாதம் இப்பணிகள் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு பணிகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில் சட்டப்பேரவை தேர்தல், தற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தல் போன்ற பணிகளால் மாநகராட்சி அதிகாரிகள், பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மீது கவனம் செலுத்தவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story