இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் புலியூர் பேரூராட்சி தலைவர், கீரமங்கலம் துணைத்தலைவர் ராஜினாமா
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி, கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் தங்களது பதவிகளை நேற்று ராஜினாமா செய்தனர்.
புதுக்கோட்டை:
புலியூர் பேரூராட்சி
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகளில் தி.மு.க.வும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜனதா, சுயேச்சை வேட்பாளர் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர்.
இதையடுத்து, புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து அக்கட்சியின் சார்பில் 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலாராணி (வயது 51) என்பவர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
மறைமுக தேர்தல்
இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அப்போது தி.மு.க. சார்பில் 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புவனேஸ்வரிக்கு ஆதரவாக அக்கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர். இதற்கு 14-வது வார்டு கவுன்சிலர் ரேவதி முன்மொழிந்தார். 12-வது வார்டு கவுன்சிலர் தங்கமணி வழிமொழிந்தார். புவனேஸ்வரியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ராஜினாமா
இதற்கிடையே தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் தங்களது பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து புலியூர் பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட புவனேஸ்வரி நேற்று தனது பதவியை செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை வழங்கினார்.
கீரமங்கலம்
இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி துணைத்தலைவர் பதவி தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 11-வது வார்டு கவுன்சிலர் முத்தமிழ்செல்வி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதே நேரத்தில் 8-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த தமிழ்செல்வன் போட்டி வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்ததால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழ்செல்வன் 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.
இந்தநிலையில் தி.மு.க. தலைமையின் அறிவிப்பை தொடர்ந்து தனக்கு வாக்களித்த 10 கவுன்சிலர்களுடன் கீரமங்கலம் பேரூராட்சிக்கு வந்த தமிழ்செல்வன், பேரூராட்சி தலைவர் சிவக்குமார் மற்றும் செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோரிடம் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.
கட்சி தலைமைக்கு கோரிக்கை
இதுகுறித்து தமிழ்செல்வன் கூறுகையில், தி.மு.க. தலைவர் அறிவிப்பை மதித்து அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் கருத்திற்கு மதிப்பளித்து எனது துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன் என்றார். அவருடன் வந்திருந்த மற்ற கவுன்சிலர்களில் சிலர் எப்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க. வேட்பாளரையே துணைத்தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்கள்.
Related Tags :
Next Story