6 என்ஜின்களை கொண்ட விமானத்தை ரஷிய ராணுவம் அழித்தது-தாயகம் திரும்பிய குளித்தலை மாணவர் பேட்டி
உக்ரைன் விமான தளத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 6 என்ஜின்களை கொண்ட விமானத்தை ரஷிய ராணுவம் அழித்ததாக தாயகம் திரும்பிய குளித்தலை மாணவர் கூறினார்.
குளித்தலை,
கார்கிவ் பல்கலைக்கழகம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள திம்மாச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு சூர்யா (வயது 20) என்ற மகனும், சுபிக்சா (18) என்ற மகளும் உள்ளனர். குளித்தலையில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்த சூர்யா ஏரோபேஸ் கல்வி கற்கும் ஆர்வத்தில் கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தற்போது 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்ததால் தனது மகனை மீட்க வேண்டுமென சின்னதுரை-சுதா தம்பதியினர் கரூர் மாவட்ட கலெக்டருக்கு கடந்த மாதம் மனு அளித்தனர்.
தரைமட்டமான கட்டிடங்கள்
இதற்கிடையே மத்திய, மாநில அரசின் நடவடிக்கையால் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட சூர்யா தனது வீட்டிற்கு நேற்று வந்தார். அவரை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி அணைத்துக்கொண்டனர்.
உக்ரைனில் தான் பார்த்த போர் நிகழ்வுகள் மற்றும் அங்கு மாட்டிக்கொண்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்து ‘தினத்தந்தி’ நிருபரிடம் சூர்யா கூறியதாவது:-
ரஷியாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் உள்ள பெரிய கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. எங்கள் பல்கலைக்கழகத்தின் ஆலோசனைப்படி நாங்கள் உயிர்பிழைக்க பதுங்கு குழியில் பதுங்கியிருந்தோம். உக்ரைன் எல்லையையொட்டி எங்களது பல்கலைக்கழகம் இருந்ததால் எங்களது விடுதி அருகே சுமார் 10 கி.மீ. தொலைவில் ஏவுகணை, பீரங்கி தாக்குதல்களை இரவு நேரங்களில் பார்த்தோம்.
3 குண்டுகள் வெடித்தன
உக்ரைன் ராணுவம் எங்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்தபடியே இருந்தது. சண்டை நடக்காத நேரத்தை பயன்படுத்தி எங்களுக்கு தேவையான பொருட்களை வெளியில் சென்று வாங்கி வந்தோம். இந்திய தூதரகத்தின் துரித நடவடிக்கையால் எங்கள் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த 40 பேர் கடந்த 4-ந் தேதி கார்கிவ் நகரில் உள்ள ஓக்சால் ரெயில்நிலையத்திற்கு வந்தோம்.
அப்போது, ரெயில்நிலையம் அருகே 3 குண்டுகள் வெடித்ததை பார்த்தோம். சுமார் 23 மணி நேர ரெயில் பயணத்திற்கு பிறகு கடந்த 5-ந் தேதி காலை உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள லிவீவ் நகரத்தை ரெயில் வந்தடைந்தது. அங்கிருந்து இந்திய நாட்டின் தூதரகம் மூலம் பஸ்சில் ஹங்கேரி நாட்டின் எல்லையை அடைந்தோம். அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றபோது, அவர்கள் எங்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து உணவு வழங்கினார்கள்.
6 என்ஜின்களை கொண்ட விமானம்
இதையடுத்து 6-ந் தேதி விமானம் மூலம் இந்தியாவை சேர்ந்த 400 பேர் டெல்லிக்கு புறப்பட்டு 7-ந் தேதி காலை டெல்லிக்கு வந்து சேர்ந்தோம். டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழக அரசு விடுதியில் தங்கி அன்று இரவு 11 மணிக்கு சென்னைக்கு வந்தோம். சென்னையில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு வந்து பின்னர் வீட்டிற்கு வந்தேன்.பெரும்பாலான விமானங்களில் 4 என்ஜின்கள் மட்டுமே இருக்கும். ஆனால் எங்கள் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆன்டெனோ என்பவர் 6 என்ஜின் கொண்ட விமானத்தை கண்டுபிடித்திருந்தார். உலகிலேயே உக்ரைனில் மட்டுமே 6 என்ஜின்களை கொண்ட பெரிய விமானம் இருந்தது.
ராணுவம் அழித்தது
இந்தநிலையில், உக்ரைன் விமான தளத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 6 என்ஜின்களை கொண்ட விமானத்தை கடந்த ஒருவாரத்திற்கு முன்பு ரஷிய ராணுவம் அழித்துவிட்டது. மேலும், அந்த விமானத்தின் டிசைன் தொலைந்துவிட்டதால் மீண்டும் அதை செய்ய முடியாமல் போகியுள்ளது.
உக்ரைனில் உள்ள சுமி, டெனிப்ரோ போன்ற மாநிலங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். எனவே, மத்திய அரசு அவர்களை உடனடியாக மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story