உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் பெற்றோரிடம் உளவுத்துறை விசாரணை


உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர் பெற்றோரிடம் உளவுத்துறை விசாரணை
x

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர் ரஷியாவுக்கு எதிரான போரில் பங்கேற்று உள்ளார். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர்.

கோவை,

உக்ரைன் மீது கடந்த 24-ந் தேதி ரஷியா போர் தொடுத்தது.

இந்த போர் நேற்று 13-வது நாளாக நீடித்தது.

இந்திய மாணவர்கள்

இந்த போர் காரணமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களை இந்திய அரசு பல்வேறு வழிகளில் மீட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பதும், அவர் ரஷியாவுக்கு எதிரான போரில் பங்கேற்று இருக்கும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

மேலும் அவர் இந்தியாவுக்கு திரும்ப மாட்டேன் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கோவை மாணவர்

கோவை சுப்பிரமணியம்பாளையம் சுவாதி கார்டனை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 52). பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஜான்சி லட்சுமி. இவர்களுக்கு சாய்நிகேஷ் (வயது 22), சாய்ரோஷித் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

சாய்நிகேஷ், காரமடையில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்தார். இவர் சிறுவயது முதலே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் 2 முறை முயற்சி செய்தும் உயரம் குறைவு காரணமாக இந்திய ராணுவத்தில் சேர முடியவில்லை.

ஏமாற்றம்

இதையடுத்து அமெரிக்க ராணுவத்தில் சேர விரும்பி சென்னை தூதரகத்தை அணுகினார். அதிலும் சாய்நிகேசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதையடுத்து அவர் கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் சேர்ந்து படித்து வந்தார்.

இதற்கிடையே அவருக்கு உக்ரைனில் உள்ள வீடியோ கேம் டெவலப்மெண்ட் நிறுவனத்தில் பகுதிநேர வேலை கிடைத்து உள்ளதாகவும், படித்துக்கொண்டே வேலை செய்து வருவதாகவும் செல்போனில் தனது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார்.

ராணுவத்தில் சேர்ந்தார்

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இதனால் அங்குள்ள பதற்றமான சூழல் காரணமாக வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் தங்களின் நாடுகளுக்கு செல்ல தொடங்கினர். இதுபோல் சாய்நிகேசையும் ஊருக்கு வந்து விடுமாறு பெற்றோர் அழைத்தனர்.

அப்போது அவர், ஜார்ஜியா நேஷனல் லெஜியன் துணை ராணுவ பிரிவில் சேர்ந்துவிட்டதாகவும்,ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருவதாகவும் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக இந்தியா திரும்புமாறு அவரை அழைத்து உள்ளனர்.

உளவுத்துறை விசாரணை

ஆனால் அவர், தான் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனாலும் நிம்மதி அடையாத பெற்றோர், மகனை மீட்டு தர வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக சாய்நிகேஷின் பெற்றோரிடம் விசாரித்தனர்.

வருகிற ஜூலை மாதம் படிப்பு முடிந்து நாடு திரும்புவான் என்று நம்பி இருந்த நிலையில், சாய்நிகேஷ் போர் நடைபெறும் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து இருப்பதால் தங்களின் மகனின் நிலை குறித்து பெற்றோர் கவலை அடைந்து உள்ளனர்.

பரபரப்பு

உக்ரைனில் போர் நடைபெற்று வருவதால் மகனின் நிலை குறித்து பரிதவித்து வருவதாகவும், எந்த கருத்தையும் கூறவிரும்பவில்லை என்றும் சாய்நிகேஷின் பெற்றோர் தெரிவித்தனர்.

உக்ரைன் போர் காரணமாக இந்திய மாணவர்கள் இந்தியா திரும்பும் நிலையில் கோவை மாணவர் சாய்நிகேஷ் மட்டும் இங்கு வராமல் அந்த நாட்டு ராணுவத்தில் சேர்ந்து ஆதரவாக போர் புரிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாய்நிகேஷ் போல் இந்திய மாணவர்கள் வேறு யாராவது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து உள்ளார்களா? என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story